

முஸ்லிம்களின் தனிநபர் சட்டங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) உள்ளது. இந்த அமைப்பு பெண்கள் குறித்து தற்போது வெளியிட்டுள்ள விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மீக தலங்களில் மதம் மற்றும் பாலினப் பாகுபாடின்றி பெண்கள் நுழைவதற்கான தடைகள் சில இடங்களில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் கேரளாவில் இருக்கும் சபரிமலையும் முஸ்லிம்களின் மசூதியும் அடங்கும். இவற்றில் பெண்கள் நுழையும் அனுமதி இன்னும் முழுமையாக வரவில்லை என்பதும் இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது . அத்துடன் பிற வழிபாட்டு தளங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து தொடரப்பட்ட வழக்குகளும் இந்த அமர்வில் இணைந்து ஆராயப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் பெண்கள் மசூதிக்குள் நுழைவதற்கு எந்த வித தடையும் இல்லை என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (AIMPLB) உச்சநீதிமன்றத்தில் தெளிவாக விளக்கமளித்துள்ளது. இந்த வழக்கில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சம்ஷாத் ஆஜராகி "இஸ்லாம் பெண்களை மசூதிகளில் தொழுகை நடத்த தடை செய்யவில்லை" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாதத்தில் இஸ்லாத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் குறிப்பிட்டு ஒழுங்கு முறைகளை பின்பற்றி மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான பிரமாண பத்திரத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம் என்றும் மசூதிகளில் அவர்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு மசூதிகளில் கருவறை என்ற தனிப்பகுதி இல்லை இருப்பினும் பெண்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்ததாக கருதப்படுகிறது என்ற விளக்கத்தையும் அளித்தார்.
அத்துடன் இஸ்லாம் என்பது செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவான வழிகாட்டுதல்களை கொண்ட ஆழமான மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த மார்க்கமாகும் என்று நீதிபதிகள் அமர்வின் முன் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதி அமானுல்லா, ‘ஒரு வீட்டில் உள்ள அனைவரும் மசூதிக்குச் சென்றால், குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்பதே இதற்கு காரணம்' என்று தெரிவித்ததை அடுத்து வழக்கறிஞர் சம்ஷாத் அதற்கான பதிலாக "அத்தியாவசிய மத நடைமுறை (ERP) என்ற கோட்பாடு இஸ்லாமிய சூழலில் நீதிமன்றங்களால் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது" என விளக்கி தனது வாதங்கள் மூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இஸ்லாமில் முழுத் தடை என்ற ஒன்று இல்லை என்றும் ஆனால் நடைமுறை மற்றும் வசதிகள் நாடுகள் மசூதிகள் அடிப்படையில் மாறும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கள் கூறப்படுகிறது.
எனினும் பெண்கள் மசூதிக்கு வரலாம், தொழலாம்.ஆனால் கூட்டுத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்வது “கட்டாயம்” அல்ல.பெண்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்தது என்ற மதநெறி பார்வை இருப்பதாகவும் கூறப்பட்டது.
மசூதிக்குள் எங்கு நிற்க வேண்டும், எந்த வாசலில் நுழைய வேண்டும் போன்ற விஷயங்களில் ஒழுங்கு விதிகள் இருக்கலாம் எனவும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த கருத்து, மதஸ்தலங்களில் பெண்கள் நுழையும் உரிமை மற்றும் மதம் சார்ந்த பாரம்பரிய பழக்கவழக்கம்
என்ற பெரிய அரசியலமைப்பு விவாதத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் சபரிமலை, தர்கா, மசூதி போன்ற இடங்களில் பெண்கள் நுழைவு தொடர்பான வழக்குகளுக்கு இது தாக்கம் ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.