ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக விமான கட்டணங்கள் உயர்வு!

ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக விமான கட்டணங்கள் உயர்வு!
Published on

ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக சென்னையில் இருந்து புவனேஷ்வர் வழித்தடத்தில் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு, நடந்த கோரமண்டல் ரயில் விபத்து காரணமாக இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ரயில் விபத்து காரணமாக காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒடிசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், பயணம் தடைப்பட்டவர்களையும் காண உறவினர்கள் பெரும்பாலும் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சாலை வழியாக சென்றால் பல மணிநேரம் ஆகும் என்பதால், கோரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை உடனடியாக காணவும் உறவினர்கள் விமான சேவையை தற்போது நம்பி உள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக சென்னையில் இருந்து புவனேஷ்வர் வழித்தடத்தில் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மதுரை (சிபிஎம்) கட்சி எம்.பி.சு.வெங்கடேசன், கொடூரமான ரயில் விபத்தைக்கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு செல்லும் டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை உயர்ந்துள்ளது. முன்பு 4 ஆயிரத்திற்கு விற்பனைச் செய்யப்பட்ட விமான டிக்கெட் தற்போது 24ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையை கண்காணிக்கும் மத்திய அரசு ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களை காணச் செல்லும் உறவினர்களின் பயணக் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தின் சுவடுகள் மறையாத நிலையில், தனியார் விமான நிறுவனங்கள், திடீரென சென்னையில் இருந்து புவனேஷ்வர் வழித்தடத்தில் செல்லும் விமானங்களின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி இருப்பது பொது மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதம் காக்கப்படவேண்டிய இந்த சூழ்நிலையில், ஏரிகிற வீட்டில் சூறையாடும் நிகழ்வை போல் விமான நிறுவனங்கள் செயல்படுவது மனசாட்சியற்ற செயல் என சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com