
அகமதாபாத் அருகே விமானம் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட AI171 பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் விமானம் நிலையம் அருகே மேகனி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. விமானம் விழுந்து வெடித்து சிதறிய போது சுமார் 60 டாக்டர்கள் ஹாஸ்டலில் உணவருந்திக்கொண்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில் இந்த விபத்தில் பிஜே மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் பலர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் 90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களும் விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கியுள்ள பயணிகளின் நிலை குறித்த விவரங்களை அறிய 011-24610843, 9650391859, 9650391859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இப்போது உறுதியாக சொல்ல முடியாது என்று மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது.
விமான விபத்துக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, அமித்ஷா, ராகுல்காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.