கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் சாலை வழியாகவே சபரிமலை சென்று வர வேண்டி உள்ளது. ரயில் போக்குவரத்தோ, விமானப் போக்குவரத்தோ அருகில் இல்லை. சுமார் எண்பது கிலோ மீட்டர் தொலைவிலேயே ரயில் போக்குவரத்து உள்ளது. அங்கிருந்து முற்றிலும் மலைப்பாதை வழியாகவே சபரிமலைக்கு வர வேண்டும்.
இந்நிலையில் சபரிமலைக்கு விமானப் போக்குவரத்து வேண்டும் என்று பல வருடங்களாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், சபரிமலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள் ஆகும். எனவே, விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை வாங்க வேண்டியிருந்தது. மேலும், விமான நிலையம் அமைக்க உகந்த இடத்தையும் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையில் சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,250 ஏக்கர் பரப்பளவில் 4,000 கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு திட்டமிட்டிருந்தது.
இது சம்பந்தமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் கேரள அரசு தரப்பில் விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது. இதில் முதல் விஷயமாக் பாதுகாப்பு துறை அனுமதி ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அடுத்து தற்போது எருமேலியில் சபரிமலை சர்வதேச கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது சபரிமலைக்குச் செல்ல விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வரும் கேரள அரசுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகும். மேலும், விமான நிலையம் எப்படி அமைக்கப்படும் என்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையையும் (டிபிஆர்) விரைவில் கேரள அரசு தயாரிக்க உள்ளதாம். அதற்குத் தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து அரசு டெண்டர் விடும் என்றும் சொல்லப்படுகிறது.
சபரிமலை விமான நிலையத்தின் சிறப்பு அதிகாரி வி.துளசிதாஸ், இந்தச் செய்தியை உறுதி செய்திருந்தார். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றதன் மூலம், சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் , மிகப் பெரிய தடையைத் தாண்டிவிட்டதாகவும் இவர் கூறினார். சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் மேற்கூறிய தகவல்களை உறுதி செய்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறது. இந்த விமான நிலையம் 'டேபிள்டாப்' விமானப் பாதையாக இருக்கக்கூடாது என்று விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளதால், கூடுதலாக 301 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஓடுபாதையின் நீளம் 3.4 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, புதிதாக அமைய உள்ள சபரிமலை விமான நிலையம் மதுரை விமான நிலையம் இடையே உள்ள தொலைவு பற்றி விமான போக்குவரத்து துறை விளக்கம் கேட்டது. சபரிமலை விமான நிலையத்தால் மதுரை விமான நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கேரள அரசு தரப்பில் ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபரிமலை விமான நிலையத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இதர துறைகளும் அடுத்தடுத்து அனுமதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலையில் புதிதாக அமைய உள்ள விமான நிலையம் கேரளாவின் ஐந்தாவது விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் சபரிமலை பக்தர்களுக்கு மட்டுமின்றி, தேக்கடி, வாகமன், கோட்டயம், மூனாறு மற்றும் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் வசதியாக இருக்கும் என்பதால் கேரள அரசு இந்த விமான நிலையம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தது. இப்போது விமான நிலையம் அமையப்போவது உறுதியாகி உள்ளது.
சபரிமலை விமான நிலையம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது வரவேற்றத்தக்கது. இது சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.