

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்காக மே 4 ஆம் தேதி நாடே காத்துக் கொண்டிருக்கிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் தேர்தல்கள் வரும்போது திமுக அல்லது அதிமுக தான் ஜெயிக்கும் என்ற சூழ்நிலைகள் இருந்தது. சில நேரங்களில் இந்த சூழ்நிலைகள் அரிதாக மாறவும் செய்கின்றன.
எம்ஜிஆருக்கு பின்னர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கிய போது , அவர் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற பரபரப்பு அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னர் தற்போது தான் அது போன்ற ஒரு மும்முனைப் போட்டி தமிழக சட்டமன்றத் தேர்தலில் நிலவியது. ஒரு கருத்துக்கணிப்பில் விஜய் ஆட்சியை பிடிப்பார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு வருகை தந்திருந்த, நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் பத்திரிக்கையாளர்கள் இந்த தேர்தலில் விஜயின் தாக்கத்தை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஐஸ்வர்ய லட்சுமி "எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பவும் பிடிக்கும் , நான் கேரளாவில் இருக்கிறேன். அதனால் விஜய்க்கு ஓட்டு போட முடியவில்லை", இதற்காக நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் மட்டுமல்ல கேரளாவில் உள்ள எனது நண்பர்களும் வருத்தமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்க வேண்டும். என் அம்மா விஜய்க்காக நிறைய பிரார்த்தனைகள் செய்துள்ளார். நடிகர்களிடம் அரசியல் பேச வேண்டாம் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை கேட்கும் பொழுது , விஜய் அரசியல் நுழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அவர் பொது மக்களிடம் இருந்து மரியாதையும் அன்பையும் பெற்று மிகவும் மதிப்புடன் வாழ்கிறார். ஆனாலும் மக்கள் தனக்கு கொடுத்த அன்பு, மரியாதை ஆகியவற்றை திருப்பிக் கொடுக்க வேண்டும் ,அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்வின் காரணமாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரது அரசியல் வருகையை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.
அவர் வெற்றி பெற வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன் அதற்காக நான் பிரார்த்திக்கிறேன். மீடியாவில் பார்க்கும் பொழுது மக்களுக்கும் அதே ஆசை இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால், நான் அதை பேசக்கூடாது, அது பற்றி மக்கள் தான் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்னாலும் ஐஸ்வர்யா லட்சுமி விஜய் மீதான தனது அபிமானத்தை, அவரது திரைப்படங்கள் வெளிவரும் போது வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் தனுஷிற்கு ஜோடியாக ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆயினும் அவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
கட்டா குஸ்தி திரைப்படம் அவரை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியுள்ளது. தற்போது கட்டாகுஸ்தி 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வழக்கமாக தமிழ்நாட்டு நடிகர்கள் , தேர்தல் காலத்தில் பொதுவெளியில் ஒரு அரசியல்வாதியை ஆதரித்து பேசுவதில்லை. அந்த வகையில் ஐஸ்வர்ய லட்சுமி தைரியத்துடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளது , விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.