நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக துணை முதல்வரான அஜித் பவார்!

நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக துணை முதல்வரான அஜித் பவார்!
Published on

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சரத்பவாரின் உறவினருமான அஜித் பவார் அதிரடி திருப்பமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வராக பதவியேற்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கட்சியின் செயல் தலைவராக மகள் சுப்ரியா சுலேவை நியமித்தார். அஜித் பவாருக்கு கட்சியில் எந்த பதவியும் தரப்படவில்லை. அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக மட்டுமே இருந்து வந்தார். கட்சியில் தனக்கு முக்கிய பதவி அளிக்கப்படாதது அஜித்பாவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே பா.ஜ.க-சிவசேணை கூட்டணி ஆட்சியில் இணைந்துள்ள அஜித் பவார், தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு 40-க்கும் மேலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர விகார் அகாதி கூட்டணியில் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியின் முகமாக உத்தவ் தாக்கரேவை சித்தரிப்பது அஜித்பவாருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. புதிய அரசியல் திருப்பம் காரணமாக அஜித்பவார், கடந்த நான்கு வருடங்களில் மூன்றாவது முறையாக, மூன்று வெவ்வேறு முதல்வர்களின் கீழ் துணை முதல்வராகியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 105 இடங்கள் கிடைத்தன. கூட்டணி கட்சியான சிவசேனை 56 இடங்களில் வென்றிருந்தது. ஆட்சியமைக்க போதிய பலம் இருந்த போதிலும் இரு அணியினரிடையே யார் முதல்வர் என்பதில் மோதல் எழுந்தது.

இதனிடையே சிவசேனை, பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மகாராஷ்டிர விகாஸ் அகாதி என்னும் கூட்டணியை உருவாக்கியது. புதிய அரசில் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார் என சரத் பவார் அறிவித்தார்.

எனினும் அதிரடி நடவடிக்கையாக அப்போது ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷியாரி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸுக்கு முதல்வராகவும், அஜித்பவாருக்கு துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அரசு மூன்று நாட்கள்கூட நீட்டிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் தேதி உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி அரசின் முதல்வராக பதவியேற்றார். அஜித் பவார் துணை முதல்வரானார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகார் அகாதி அரசு இரண்டு ஆண்டுகள் பதவில் நீடித்த நிலையில், சிவசேனை கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே 39 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து கட்சியில் பிளவு ஏற்பட்டு, பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலில் உத்தவ் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

பின்னர் சிவசேனை அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வரானார். இந்த நிலையில் அதிரடி திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் மூன்றாவது முறையாக இரண்டாவது துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com