மகாராஷ்டிர அரசியல் திருப்பங்களுக்கு இடையில் தெலங்கானா முதல்வர் கே.சி.ஆரை சந்தித்தார் அகிலேஷ்!

மகாராஷ்டிர அரசியல் திருப்பங்களுக்கு இடையில் தெலங்கானா முதல்வர் கே.சி.ஆரை சந்தித்தார் அகிலேஷ்!

சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் வந்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை (கேசிஆர்) சந்தித்துப் பேசியுள்ளார்.

பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒருநாள் முன்னதாக கூறியிருந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அகிலேஷ், தெலங்கானா முதல்வரை திடீரென சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் பாரத் ராஷ்டிர சமிதி இடம்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளதையே இது காட்டுகிறது என்று கேசிஆர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாதில் பிரகதி பவனில் கேசிஆரை சந்திப்பதற்கு முன்னதாக பேசிய அகிலேஷ் யாதவ், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. எனினும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிஆர்எஸ். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டும் ஒரே மாதிரியான அரசியல்கட்சிகள்தான். அவற்றை தவிர்த்த கூட்டணி ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிஆர்எஸ் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்ற நிலையிலிருந்து மாறுபடுகிறது. எனினும் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு பிஆர்எஸ். கூறும் காரணங்கள் எதிரணியினர் கூறும் காரணங்களை ஒத்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவிவிடுவது, ஆளுநரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்படும் மாநில அரசை சீர்குலைப்பது, வருவாய் பங்கீட்டில் மாநிலங்களிடையே பாரபட்சம் காட்டுவது என பல விஷயங்கள் ஒன்றுபட்டுள்ளன.

ஆனாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் கருத்தை பிஆர்எஸ் பொருட்படுத்தவில்லை. காங்கிரஸ் இருக்கும் அணியில் பிஆர்எஸ் இருக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேராமல், பல்வேறு கொள்கைகள் இருந்தாலும் பிரச்னைகளை முன்வைத்து ஒன்றுசேருவது சரியானதாக இருக்கும் என்று பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கவிதா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அவற்றுக்கு ஆதரவு பெறும் நோக்கிலேயே அகிலேஷ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

எனினும் தில்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஆதாயம் பெற்றதாக முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதால் பா.ஜ.க.வுக்கு எதிராக பிஆர்எஸ் காய் நகர்த்துமா என்பது சந்தேகமே என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com