‘இந்தியாவோடு இணைவதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது’ யோகி ஆதித்யாநாத்!

‘இந்தியாவோடு இணைவதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது’ யோகி ஆதித்யாநாத்!

த்தரபிரதேசத்தின் முதலமைச்சராக இருந்து வருபவர் யோகி ஆதித்யாநாத். இவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், இந்து மதம், இஸ்லாம், பாகிஸ்தான் தொடர்பான பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், ‘‘இந்து என்பது ஒரு மதமோ, நம்பிக்கையோ அல்லது ஒரு பிரிவோ கிடையாது. அது ஒரு கலாசாரத்தின் பெயர். இந்து என்கிற அடையாளம் ஒவ்வொரு இந்தியருக்குமான கலாசார குடியுரிமை ஆகும்.

இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை, அங்குள்ளவர்கள் (அரபுக்கள்) ‘இந்துகள்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அங்குள்ள யாரும் இவர்களை (இந்தியாவில் இருந்து ஹஜ் செல்பவர்களை) ஒரு ஹாஜியாக பார்ப்பதில்லை. அதோடு இவர்களை யாரும் இஸ்லாமியர்களாகவும் ஏற்பதில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்தியா ஒரு இந்து நாடு என்பது அனைவருக்கும் புரியும். காரணம், இங்குள்ள குடிமக்கள் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை நாம் மதத்தோடோ, நம்பிக்கையோடோ, பிரிவோடோ இணைக்கிறோம் என்றால், அதைப் புரிந்துகொள்வதில் நாம் தவறு செய்கிறோம் என்றே அர்த்தம்.

அதோடு, ஆன்மிக உலகில் பாகிஸ்தானுக்கு என்று உண்மையான தனி அடையாளம் ஏதும் கிடையாது. எது ஒன்று உண்மையானதாக இல்லாதிருக்குமானால் அது நீண்ட காலம் நீடிக்காது. அதனால் பாகிஸ்தான் விரைவாக இந்தியாவோடு இணைந்து விடுவது அந்த நாட்டுக்கு நல்லது. அகண்ட பாரதம் என்பது ஒரு உண்மையாகும். எதிர்காலத்தில் அது நிச்சயம் நிகழும்” என்று அவர் கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com