அனைத்துப் பெரு நகரங்களிலும் அந்தப் பிரச்சனை இருக்கிறது.

அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
அனைத்துப் பெரு நகரங்களிலும் அந்தப் பிரச்சனை இருக்கிறது.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த திங்கட் கிழமை (09.01.2023) அன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின் மீதான விவாதங்கள் கடந்த நான்கு நாட்களாக எல்லா மீடியாக்களிலும் கண்டித்தும், ஆதரித்தும் வந்தன. இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவடைவதால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது.

 இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  கேள்வி ஒன்றை எழுப்பினார்.

'கோவை தெற்கு தொகுதி மசால் லே அவுட் பகுதியில் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கிருக்கும் கால்வாய் நெடுங்காலமாகவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் அதை முழுமையாக தூர் வார முடியவில்லை. மாநகராட்சி அதற்காகத் தனி திட்டமிடல் செய்துள்ளார்கள். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே அதை சீர்படுத்தி தரவேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு,

அந்த திட்டத்தில் இருக்கும் பெரியப் பிரச்னையே கால்வாயின் ஓரத்தில் மக்கள் குடியிருப்பதுதான். மக்களுக்கு வேறு இடத்தினை ஏற்பாடு செய்து கொடுத்த பின் அதை சீர்படுத்தும் சூழ்நிலை உள்ளது. தமிழக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அவர்களுக்கு உரிய இடத்தை ஒதுக்கி கொடுத்த பின் அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லையென்றால் நீங்களே நாளை காலை காலி செய்யக்கூடாது என போராட்டம் செய்வீர்கள்.

இதற்கு முன் கோவையில் சாலை சரியில்லை என்று சொல்லியுள்ளீர்கள். உங்கள் பேட்டி பார்த்தேன். அடுத்த மாதத்திற்குள்ளாகவே அத்தனை சாலைகளையும் புதுப்பிப்பதற்காக 200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. நீங்கள் சொல்லும் தூர்வாரும் பணியில் அனைத்து பெரு நகரங்களிலும் அந்தப் பிரச்சனை இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீரை கொண்டு சென்று எஸ்.டி.பி மூலம் சுத்தம் செய்து மீண்டும் அதை உபயோகிக்கும் பணியை அனைத்து நகரங்களிலும் செய்து வருகிறோம்' எனக் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com