

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் சுமார் 900 நாட்களாக போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கு சென்ற விஜய் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதலைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.
"விமான நிலையங்கள் அல்லது தொழில் வளர்ச்சிக்கு தாம் எதிரானவர் அல்ல ஆனால் பரந்தூர் அதற்கான பொருத்தமான இடமல்ல என்றும், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும்" என்றும் அப்போது விஜய் கூறியிருந்தது பரபரப்பை தந்தது.
பரந்தூர் விமான நிலையம் என்பது சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகும். மாநில அரசுடன் மத்திய அரசும் கை கோர்க்கும் திட்டமாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் ₹27,400 கோடி மதிப்பீட்டில், 5,700 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், அமைக்க திட்டமிடப்பட்டு பல ஆண்டுகளாக அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தள்ளிப்போய் கொண்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாடு அமைச்சரவை பரந்தூரை சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடமாக ஒப்புதல் அளித்தது.அதன் பிறகு நில அளவீடு, சுற்றுச்சூழல் ஆய்வு, மக்கள் கருத்து கேட்பு போன்ற பணிகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.ஆனால் அரசின் கையகப்படுத்தும் நடவடிக்கையால் விவசாய நிலங்கள் மற்றும் சுமார் 26% நீர்நிலை பகுதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. நீர்நிலைகளை உள்ளடக்கிய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய முதலமைச்சர் பதவி ஏற்ற சில நாட்களிலேயே இத்திட்டத்தின் மீதான ஆலோசனை அதிகாரிகளிடம் நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சிறப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.மேலும் ஆலோசனைக்குப் பின் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதா அல்லது மாற்று இடமா என எந்த முடிவு எடுக்கப்படும் என்பதை உற்று நோக்கி வருகின்றனர் மக்கள்.
பல அமைப்புகளால் முன்வைக்கப்படும் "வளர்ச்சி வேண்டும்; ஆனால் விவசாயம் அழியக்கூடாது” என்ற கோரிக்கையை விஜய் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும்.