டைட்டானிக் கப்பலைக் காண நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரும் உயிரிழப்பு!

டைட்டானிக் கப்பலைக் காண நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரும் உயிரிழப்பு!
Published on

ட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகளில் மோதி உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் கப்பல் 1912ம் ஆண்டு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆயிரத்து ஐநூறு பேருக்கும் மேல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெற்று நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் இந்தக் கப்பல் குறித்த ஆய்வும், உடைந்த அந்தக் கப்பலைக் காண வேண்டும் என்ற ஆர்வமும் பலரிடமும் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில்தான் அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக, சுற்றுலாப் பயணிகளை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அழைத்துச் செல்லும் Ocean Gate Expeditions நிறுவனர் ஸ்டோக்டன் ருஷ் கடந்த 18ம் தேதி பிரிட்டிஷை சேர்ந்த ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நீச்சல்காரர் பால் ஹென்றி நர்ஜோலெட், பாகிஸ்தான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றார். கடலுக்குள் சென்ற இந்த ஐந்து பேரும் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து பேருடன் சென்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் திடீரென காணாமல் மாயமாகிப் போனது.

இதையடுத்து, காணாமல் போன அந்த நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா, கனடா மற்றும் பிரெஞ்சு நாடுகளைச் சேர்ந்த கடலோர காவல்படையினர் கடந்த ஐந்து நாட்களாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், கடலுக்குள் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்து விட்டதாகவும் அமெரிக்கக் கடலோரக் காவல்படை நேற்று தகவல் தெரிவித்து இருக்கிறது.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கக் கடலோரக் காவல்படை, ‘கடலில் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், கடலின் அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் வியாழக்கிழமை காலை ஐந்து பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அது நீர்மூழ்கிக் கப்பலின் சிதறிய பாகங்களாக இருக்கலாம்’ என்றும் தெரிவித்து இருக்கிறது. ஆனாலும், ‘உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை' என்றும் கூறி உள்ளது. முன்னதாக, மீட்புப் பணியின்போது ஆழ்கடலில் உரத்த சத்தம் ஒன்று கேட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சத்தம் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது அது நீர்மூழ்கிக் கப்பல் வெடித்த சத்தம்தான் எனக் கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்புக்கு முன்பே அமெரிக்கக் கடலோரக் காவல்படையினர், `எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட ஐந்து பேரையும் நாங்கள் இழந்துவிட்டோம். இந்த நேரத்தில் எங்கள் இதயங்கள் உயிரிழந்த ஐந்து பேரின் ஆன்மாக்களுடனும், அவர்களது குடும்பத்திருடனும் இருக்கின்றன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப் பணியில் கடினமாக உழைத்த சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி' என Ocean Gate நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com