‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை கோரி அனைத்திந்திய சினிமா தொழிலாளர் சங்கம் பிரதமருக்குக் கடிதம்!

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை கோரி அனைத்திந்திய சினிமா தொழிலாளர் சங்கம் பிரதமருக்குக் கடிதம்!

மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும், ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி பல கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத் தந்திருக்கிறது. ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதியை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அதனால் அந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரியும் இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறது.

இதுகுறித்து, இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் கடிதத்தில், ‘ஆதிபுருஷ் திரைப்படம் இந்துக்களின் மனதை மட்டுமின்றி, சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ராமர் மற்றும் ஹனுமன் ஆகியோரை அவதூறு செய்வதாக உள்ளது. இதனால், அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் ஆதிபுருஷ் திரைப்படத்தைத் திரையிட தடை கோருகிறது,

இந்தியாவின் அனைத்து மதத்தினரும் ராமரை கடவுளாக வணங்குகின்றனர். ஆனால், இந்தத் திரைப்படம் ராமரையும், ராவணனையும் வீடியோ கேம் கதாபாத்திரம் போல் சித்தரிப்பதுடன் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் உரையாடல்கள் இந்தியா மட்டுமன்றி, உலகெங்கிலும் இருக்கும் இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் மனங்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தலையிட்டு, ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவதை உடனடியாக நிறுத்தவும், திரையரங்குகள் மற்றும் OTT தளங்களில் இந்தப் படம் திரையிடுவதைத் தடை செய்யவும் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி, ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்திய ஆதிபுருஷ் பட இயக்குநர் ஓம் ராவத், எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர் சுக்லா மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com