"2023-24-ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எவ்வித நன்மைகளையும் தராமல், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது" என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
எய்ம்ஸ் மருத்துமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். செங்கல்லில் எய்எம்ஸ் என்று எழுதப்பட்ட காகிதத்தை ஒட்டி, நிதியமைச்சரை கண்டித்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.பிக்களோடு மதுரை எய்ம்ஸ் பணிகளை உன்னிப்பாக கவனித்து வரும் சு.வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட எம்.பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனோ, தி.மு.க எம்.பிக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது என்கிற புரளியை யார் கிளப்பிவிட்டார்கள் என்பது தெரியவில்லை. சமீபத்திய பட்ஜெட்டில் மட்டுமல்ல அடுத்து வரப்போகும் பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துமனை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட செய்யப்பட வாய்ப்பில்லை என்கிறது டெல்லி வட்டாரம்.
மதுரை எய்ம்எம்ஸ் மருத்துவமனைக்கான நிதியுதவியை மத்திய அரசு செய்யப்போவதில்லை. அதற்கான நிதியை பெற்றுத்தர ஏற்கனவே ஜேஐசிஏ என்னும் ஜப்பானிய நிதி நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி மருத்துமனையின் கட்டுமான செலவிற்கு ஜேஐசிஏ நிறுவனம், 1627 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஜேஐசிஏ நிறுவனம், ஜப்பான் அரசின் அதிகாரப்பூர்வ நிதி நிறுவனம். நிதியுதவி அளிப்பதில் மிகப்பெரிய நிறுவனம். ஜப்பான் அரசின் சார்பாக பல்வேறு நாடுகளுடன் இணைந்து முக்கியமான திட்டங்களை முன்னெடுத்த நிறுவனம். ஏற்கனவே இந்தியாவில் பல முக்கியமான திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது. ஆகவே, எய்ம்எஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை.
திட்ட மேலாண்மை இயக்குநரை நியமிப்பது, கட்டுமான பணிகளுக்கான டெண்ட் விடுவது, பணிகளை துரிதப்படுத்துவது போன்றவற்றில்தான் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் அழுத்தம் தருவதற்கு தமிழக அரசும், தமிழக பிரதிநிதிகளான எம்.பிக்களும் தயாராக இருக்கவேண்டும். மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்று பிரச்னையை அரசியலாக்குவது திட்டத்தை இன்னும் தாமதப்படுத்தும் என்கிறார்கள், திட்ட மேலாண்மை வல்லுநர்கள்.