மோசமான வானிலை.. அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்!

அமர்நாத் லிங்கம்
அமர்நாத் லிங்கம்
Published on

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை இந்துக்களின் முக்கிய புனித பயணமாக கருதப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கை, உறுதியான பக்தியை சோதிக்கும் வகையில் இந்த அமர்நாத் யாத்திரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் துவங்கி 61 நாட்கள் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் இதன் தேதி வேறுபடுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் லட்சக்கணக்கானவர்கள் அமர்நாத் யாத்திரை செல்வதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

இமயமலையின் தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

62 நாட்கள் நடக்கும் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை யாத்திரை நடக்க உள்ளது. சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் மலையில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் செல்லும் இந்த யாத்திரைக்காக, 3 லட்சம் பக்தர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

யாத்திரை தொடங்கிய முதல் வாரத்தில் மட்டும் 84 ஆயிரத்து 768 பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரின் பல்தால் மற்றும் பகல்ஹாம் வழித்தடங்களில் கனமழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பகல்ஹாம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 200 பேரும், பல்தால் பகுதியில் சுமார் 4ஆயிரம் பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com