மரத்தில் ஓய்வெடுக்கும் நாகபாம்பு
கர்னாடகவின் ஆனெக்கல் நாராயணபுரா அருகில் சிக்ககெரெ என ஒரு பகுதி உள்ளது. இங்கு அடர்ந்த செடி கொடிகள் உள்ளன.
ஒரு நாள், அங்குள்ள மரம் ஒன்றில் நாகப்பாம்பு ஏறி, ஒய்யாரமாய் கிளையில் படுத்து ஓய்வெடுப்பதைப் பார்த்து பயந்து, ஓடியுள்ளார் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவர் மறுநாளும் அங்கு சென்று பார்க்க, அங்கு நாகம் ஒய்யாரமாய் படுத்திருந்திருக்கிறது. பிறகு ரகசியமாய் தொடர்ந்து கண்காணிக்க, அந்த பாம்பு தினமும் காலை 11 மணிக்கு வந்து, மாலை 5 மணிவரை ஓய்வு எடுத்து, பிறகு இறங்கி மறைந்துவிடுகிறது. இது இன்றும் தொடர்கிறது. இந்த விஷயம் பலருக்குத் தெரியவர, ஏராளமானோர் வந்து பார்த்துச் செல்கின்றனர். பாம்போ அதைக் கண்டு அசைவதும் இல்லை. லட்சியமும் செய்வதில்லை.
மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் பசு!
கர்னாடகத்தின் பெலகாவி சிக்கோடி இங்களா கிராமத்தைச் சேர்ந்த ராகுல் ஜாதவ் என்பவர், நான்கு வருடங்களுக்கு முன் மகாராஷ்டிரா, மீராஜ் கால்நடை சந்தையிலிருந்து கறுப்பு – வெள்ளை நிற ஜெர்சி பசு ஒன்றை வாங்கி வந்தார்.
அதன் வயிற்றுப் பகுதியில் கறுப்பு நிறத்தில் ஒரு பெண், குழந்தையைக் கொஞ்சுவது போல் ஒரு வடிவம் அமைந்திருந்தது.
இன்று மாட்டுடன் அதுவும் வளர, அது தற்போது, தத்ரூபமாய் நன்றாகத் தெரிகிறது. சுற்றியுள்ள பல கிராமத்தினர் இதனை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கண்ணிலிருந்து தோன்றும் கல்!
சிலருக்கு மிகுந்த மன சங்கட நிலையிலும் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வராது. உன் மனசு கல்லா? என பலர் அவரைக் கண்டிப்பது உண்டு. இத்தகையச் சூழலில், கண்ணிலிருந்து கண்ணீருடன் கல்லும் வந்தால் எப்படி இருக்கும்?
கர்னாடகாவின் மைசூர் பெங்காரா பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவருக்கு அடிக்கடி தலைவலி வந்தது. அத்துடன் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர்ப் போல் ஒரு பசை திரவமும் வந்தது. வெளியே வந்த சிறு நேரத்தில் அது கல்லாக மாறியது. இப்படி விழுந்து சேகரித்த கற்களைத்தான் படத்தில், விஜயாவின் அருகில் பார்க்கிறீர்கள்.