மறுபடியும் முதலிடத்தில் அம்பானி - வாழ்க்கை ஒரு வட்டம்தான் என்பதை நிரூபிக்கும் ரிலையன்ஸ்!

மறுபடியும் முதலிடத்தில் அம்பானி - வாழ்க்கை ஒரு வட்டம்தான் என்பதை நிரூபிக்கும் ரிலையன்ஸ்!

பட்ஜெட் பரபரப்புக்கு நடுவே, அதானி குழுமத்தின் சிக்கலும் இன்னும் டிரெண்டிங்கில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து, தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இறங்கு முகத்தில் உள்ள அதானியால், ஏறுமுகத்திற்கு வந்திருக்கிறார், அம்பானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானியை பின்னுக்குத் தள்ளிய அம்பானி, இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டின் ஆரம்பித்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு வந்த அதானி, அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்தியாவின் புதிய பணக்காரரான அதானி, அனைத்து பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தையும் அலங்கரித்தார்.

ஒரே ஆண்டில் நிலைமை மாறிவிட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 133 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தற்போது சரிவை சந்தித்து வருகிறார்.

அதானி நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர் முறைகேடுகளை செய்து பங்குகளின் மதிப்பை உயர்த்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்ட பின்னர், சரிவு ஆரம்பமானது.

இன்றைய மதிப்பில் அதானி குழுமம் 75.1 பில்லியன் டாலர் மதிப்பை கொண்டிருக்கிறது. மதிப்பு குறைந்ததால் அடுத்த இடத்தில் இதுவரை இருந்து வந்த அம்பானி முன்னேறியிருக்கிறார். 83.9 பில்லியன் டாலரை கொண்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, நான்காவது இடத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் படிப்படியாக கீழே தள்ளப்பட்டு இன்றைய நிலையில் பணக்காரர்கள் பட்டியிலில் 15வது இடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து இன்னும் இறங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com