இந்தியாவில் தற்போது இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில், மிகப்பெரியது ரிலையன்ஸ் ஜியோ தான். அந்நிறுவனத்தை நடத்தி வரும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, எலான் மஸ்க்கை எதிர்த்துப் பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, கடந்த செவ்வாயன்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். அந்த உரையாடலில் அவர்களுக்குள் பல விஷயங்கள் பகிரப்பட்டது. அதில் எலான் மஸ்க் குறிப்பிடப்பட்ட ஒரு கருத்துக்கு, முகேஷ் அம்பானி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அதாவது அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் X மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், இந்தியாவுக்கு செயற்கைக்கோள் மூலமாக இயங்கும் தனது "ஸ்டார்லிங்க்" பிராட்பேண்ட் சேவையைக் கொண்டு வர அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில், இணைய சேவை அல்லாத தொலைதூர கிராமங்களில், ஸ்டார்லிங்க் சேவையானது அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதால், அதை இந்தியாவில் தொடங்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சேவைக்காக ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி உலகளாவிய உரிமங்களை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்த சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், ஜியோ நிறுவனத்திற்கும் இவருக்குமிடையே மிகப்பெரிய பிராட்பேண்ட் யுத்தம் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், ஏலம் நடத்தி அதற்கான உரிமத்தைப் பெறுவதுதான் நல்லது என எதிர் கருத்துக் கூறியிருந்தது.
ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி வெளிநாட்டு செயற்கைக்கோள் சேவை வழங்குனர்களால், இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் சமநிலை இருப்பதற்காக ஏலம் நடத்துவதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவில் மிகப் பெரிய போட்டியாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பெரும்பாலும் இந்திய அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு உடன்பட மாட்டார்கள். முடிந்தவரை இந்திய நாட்டுக்கு சாதகமாகவே அனைத்தையும் மாற்றிக்கொள்ளப் பார்ப்பார்கள். எனவே இந்த விஷயத்திலும் எலான் மாஸ்க் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல், செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலம் விடுவதையே இந்தியா விரும்பும்.