அல்சைமர் எனப்படும் மறதிநோய்க்கான ஊசிமருந்துக்கு அமெரிக்க மருந்து ஆய்வு நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது.
மருத்துவச் செலவு மிக அதிகமாக இருக்கும் அமெரிக்காவில், முக்கியமான பாதிப்புகளில் ஒன்றாக மறதிநோய் காணப்படுகிறது. இதற்கான சிகிச்சைச் செலவும் கவனிப்பும் மற்ற நோய்களைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் மறதிநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் பலனாக, லெகெம்பி எனும் ஊசியில் செலுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் தேசிய மருந்து- உணவு ஆய்வு நிறுவனம், இந்த மருந்துக்கு முன்னோட்ட அனுமதி அளித்தது. சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட லெகெம்பி மருந்தானது, முன்னதாக, 1800 நோயாளிகளுக்கு தரப்பட்டு சோதிக்கப்பட்டது.
ஐந்து மாதங்கள் நடத்தப்பட்ட அந்த சோதனையில், அறிவுத்திறனும் நினைவுத்திறனும் குறைவது, லெகெம்பி மருந்து அளித்ததன் மூலம் மெதுவாக ஆக்கப்பட்டது.
பின்னர் உறுதிப்படுத்தும் ஆய்வில் இந்த மருந்து பாதுகாப்பானதும் திறம்படைத்ததும் என்பதை உறுதிசெய்ததாக, எஃப்.டி.ஏ. எனப்படும் அமெரிக்க மருந்து ஆய்வு அமைப்பின் நரம்பியல் துறைத் தலைவர் தெரசா புராச்சியோ தெரிவித்துள்ளார்.
எஃப்.டி.ஏ.வின் அனுமதியால் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் லெகெம்பி மருந்தைப் பயன்படுத்தும் சிகிச்சையையும் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் பெரும்பாலும் காப்பீட்டை வைத்தே சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு விரைவில் பலன் கிடைக்கும்.
இதன் மூலம் ஆண்டுக்கு ஆறு கோடி முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டிய இந்த மருந்துக்கு ஆண்டுக்கு 26,500 டாலர் செலவாகும் என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே சமயம், லெகெம்பி மருந்தைப் பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைக் குறிப்புகள் சற்று அச்சமூட்டக் கூடியவையாக உள்ளன. இதைப் பயன்படுத்தும்போது சிலருக்கு மூளை வீங்குவதும் இரத்தக் கசிவும் வேறு பக்க விளைவுகளும் ஏற்படக் கூடும் என்றும் மிகச் சில பேருக்கு ஆபத்தான குறிகளும் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லெகெம்பி மருந்தைப் பரிந்துரைப்பதற்கு முன்னர், நோயாளிகளின் நிலையை சரியாகக் கவனித்து உறுதிசெய்ய வேண்டும் என்றும், மருந்தைக் கையாளவும் நோயாளிகளின் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதில் செவிலியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.