அமெரிக்காவை புரட்டிப் போட்ட இடாலியா புயல்!

அமெரிக்காவை புரட்டிப் போட்ட இடாலியா புயல்!

மெரிக்காவின் புளோரிடாவை இடாலியா புயல் புரட்டிப்போட்ட நிலையில், வலுவிழந்து ஜார்ஜியா, கரோலினா மாநிலங்களில் சீற்றத்தை காட்டி உள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான இடாலியா புயல் புளோரிடா, ஜார்ஜியா உள்ளிட்ட கரையோர மாநிலங்களை நிலைக்குலைய வைத்துள்ளது. குறிப்பாக. புளோரிடாவின் கடலோரப் பகுதிகள், சூறாவளி காற்று, அடைமழை, கடல் சீற்றம் உள்ளிட்டவையால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

புளோரிடாவின் பிக்பெண்ட் பகுதியில் உள்ள கீட்டன் கடற்கரையில் இடாலியா புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 201 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் மரங்கள், கட்டட பாகங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை காற்றில் பறந்தன. கனமழை கொட்டியதாலும், கடல் சீற்றத்தால் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததாலும் நகரங்கள் அனைத்தும் மிதந்தன. புயல் காரணமாக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் மின் இணைப்பை இழந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்புப் படையினர் மீட்டனர்.

இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்த நிலையில், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

புயல் கரையை கடந்து ஜார்ஜியா, கரோலினா மாநிலங்களை நோக்கி நகர்ந்தது. வலுவிழந்த போதிலும் சுமார் 20 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்தது. புயல் பாதிப்பு குறித்து புளோரிடா, ஜார்ஜியா, தென் கரோலினா, வடக்கு கரோலினா ஆளுநர்களிடம் கேட்டறிந்ததாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகளுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல், கியூபாவிலும் கனமழை காரணமாக சாலைகள் அனைத்திலும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்த நகரிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com