அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரி விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 254% வரை புதிய வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்புக்கு காரணம், சீனா சில முக்கியமான உயர் தொழில்நுட்ப மூலப்பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியதுதான் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. குறிப்பாக, விண்வெளி, ராணுவம் மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கு தேவையான கேலியம், ஜெர்மானியம் மற்றும் ஆண்டிமணி போன்ற பொருட்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முதலில் அமெரிக்காதான் 84% வரி விதித்தது. பின்னர் அது 145% ஆக உயர்ந்தது. இதனால் சீனா பதிலுக்கு 125 சதவீதம் வரி விதித்தது. தற்போது இதற்கு பதிலடி கொடுக்கத்தான் அமெரிக்கா 245 சதவீத அளவு வரி விதித்துள்ளது. இப்படி பதிலுக்கு பதில், பதிலுக்கு பதில் என்று சொல்லி இன்னும் எவ்வளவு வரிகளை இரு நாடுளும் மாறி மாறி உயர்த்தும் என்றே தெரியவில்லை.
இந்த புதிய வரி விதிப்பால், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு நுகர்வோர் மற்றும் தொழில்துறை பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க நுகர்வோர்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகலாம்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒருதலைப்பட்சமான மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கை என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்த வரி விதிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு பொருளாதார சவால்களை சந்தித்து வரும் உலக நாடுகள், இந்த புதிய வர்த்தகப் போரால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகலாம். பல நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.