நடுவானில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விமானி: துரிதமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கிய பெண் பயணி!

நடுவானில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விமானி: துரிதமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கிய பெண் பயணி!

மெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டு இருந்த விமானத்தில் விமானியின் உடல்நிலை மோசம் அடைந்ததால், 68 வயதான பெண் பயணி ஒருவர் விமானத்தை லாவகமாக இயக்கி அதனைத் பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள மார்த்தா வினயார்ட்டு விமான நிலையத்தில் இந்த சம்பவம், நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.12 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றதாக அங்குள்ள விமானநிலைய அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

முன்னதாக, ஆறு இருக்கைகளைக் கொண்ட பைப்பர் மெரிடியன் டர்போ ப்ரொப்பல்லர் வகையைச் சேர்ந்த அந்த விமானம், நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்ட்டரில் இருந்து புறப்பட்டது. விமானியும் பயணியும் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

விமானிக்கு 79 வயதாகும் நிலையில், வான் பறப்பில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நிலைப் பிரச்னையால் அவர் நிலைகுலைந்தார். அப்போது விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த 68 வயது பெண் பயணி சமயோசிதமாகச் செயல்பட்டு விமானத்தை இயக்கத் தொடங்கினார்.

மார்த்தா வினயார்டு விமான நிலையத்தில் அந்தப் பெண் சிறு விமானத்தைத் தரையிறக்கவும் முயன்றார். முறைப்படி லேண்டிங் கியரை இயக்கி தரையிறக்காமல், விமானத்தின் மொத்த பாகத்தையும் எப்படியோ அவர் தரையிறக்கிவிட்டார். அதில் விமானத்தின் இடது பக்க இறக்கை பாதியாக உடைந்துபோனது.

உடல்நிலை குலைந்திருந்த முதிய விமானி, தயாராக வைக்கப்பட்டு இருந்த அவசர ஊர்தியில் கூட்டிச்செல்லப்பட்டு, பாஸ்டன் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வாசிங்க்டன் போஸ்ட் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

பெரிய அளவில் காயம் ஏதும் அடையாத பெண் விமானி, உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்துக்குள்ளான விமானத்தை அப்புறப்படுத்தினர்.

விபத்து குறித்து தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பெடரல் வான்போக்குவரத்து அமைப்பு, மாநிலக் காவல்துறை ஆகியவை விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இந்த விபத்து நிகழ்ந்த வினயார்டு தளத்தில்தான், 24 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் மகன் ஜூனியர் கென்னடி பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளானது. அதில் அவரும் அவரின் மனைவி, தங்கை மூவரும் உயிரிழந்தனர்.

அப்போது, மசாசுசெட்ஸ் கடற்கரைப் பகுதியில் தண்ணீருக்கு மேலே முறையான விமானத்தைத் தரை இறக்கியபோது, ஜூனியர் கென்னடியால் இடத்தை சரியாக அறியமுடியாமல், விபத்து ஏற்பட்டது என்று காரணம் கூறப்பட்டது. இருட்டு நேரத்தில் விமானத்தைத் தரையிறக்கும்போது, விமானியால் விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்படுவது இப்படியான விபத்துகளுக்குக் காரணம் என்று பாதுகாப்பு வாரியம் குறிப்பிட்டுள்ளது. நல்வாய்ப்பாக, சனிக்கிழமை விபத்தில் யாருக்கும் உயிராபத்து நிகழவில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com