நேட்டோவில் இணைய உக்ரைன் தயாராக இல்லை - பைடன் சொல்கிறார்!

நேட்டோவில் இணைய உக்ரைன் தயாராக இல்லை - பைடன் சொல்கிறார்!
Susan Walsh

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் சேர்வதற்கு உக்ரைன் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அரசுகளுக்கு இடையிலான வட அட்லாண்டிய ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் சேர்வதற்கு, ரஷ்யாவுடன் போர் புரியும் உக்ரைன் நாடானது தயாராக இல்லை என்றும் ஆனால் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் உக்ரைனுக்கு இராணுவ, பாதுகாப்பு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

லித்துவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜோ பைடன் மூன்று நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்னர் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரஷ்யாவுடன் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், போருக்கு நடுவில் நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சேர்ப்பதா வேண்டாமா என்பது பற்றி, உறுப்பு நாடுகளிடம் ஒரே கருத்து இருப்பதாக எனக்குப் படவில்லை என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

”ஒருவேளை உக்ரைனை நேட்டோவுக்குள் சேர்த்துவிட்டால், உங்களுக்கும் தெரியும், அதன் ஒவ்வொரு நிலப் பகுதியும் நேட்டோவின் நிலப்பகுதிதான். அதைக் காப்பது நேட்டோவின் கடப்பாடு ஆகிவிடும். அதை நாங்கள் எல்லாரும் நிறைவேற்றுவது ஒரு விசயமாக இருக்காது. போர் தொடருமானால் நாங்கள் அனைவரும் அதற்குள் இழுபட்டுக் கிடப்போம். அதாவது, அப்படி நடக்குமானால் நாங்கள் ரஷ்யாவுடனான போரில் இருப்போம்.” என்று பைடன் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, போர் தொடங்குவதற்கு முன்னர், உக்ரைனை நேட்டோவில் சேர்க்கக் கூடாது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் கோரிக்கை விடுத்தார்; அதை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றும் நினைவுகூரலாகச் சொன்னார், பைடன். உக்ரனை நேட்டோவில் சேர்ப்பதற்கான ஒரு திட்ட வடிவை குறிப்பாக அதற்கு அது தகுதி பெறுவதற்கான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று தெரிவித்த பைடன்,

“உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக்கொள்வது பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்துவது ரொம்ப முன்கூட்டிய ஒரு செயல் ஆகும். ஏனென்றால் நேட்டோவின் உறுப்பு நாடாக ஆவதற்கு உக்ரைன் சில தகுதிப்பாடுகளை அடையவேண்டி இருக்கிறது. குறிப்பாக, அந்த நாட்டில் ஜனநாயகமயம் ஆக்கல் போன்றவை முக்கியமானவை.” என்றும் பைடன் சில நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நேட்டோ மாநாட்டுக்குச் செல்லும் வழியில் பிரிட்டனுக்குச் சென்ற பைடன், அந்நாட்டின் புதிய மன்னர் சார்லசைச் சந்தித்துப் பேசுகிறார். பெரிய அளவிலான அரசுமுறைப் பயணமாக இது இல்லாதபோதும், உக்ரைன், பருவநிலை தவறுதல் போன்ற பிரச்னைகள் குறித்து இரண்டு அரசுத் தலைவர்களும் பேசுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கையும் பைடன் சந்தித்து, இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனிடையே, எதிர்வரும் நேட்டோ உச்சி மாநாட்டில் தங்களுக்குச் சாதகமாம முடிவை எதிர்பார்ப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து அதிபர் ஆண்டிரீஸ் டுடாவை ஞாயிறன்று செலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். லித்துவேனியாவின் வில்னியஸ் நகரில் செவ்வாயன்று நடைபெறும் நேட்டோ மாநாட்டில் சாத்தியமாகக்கூடிய அதிகபட்சமான ஒரு முடிவு எட்டப்படும் என டுடா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com