சுறா தாக்கி உயிர்தப்பிய அமெரிக்க சுற்றுலாப் பயணி

சுறா தாக்கி உயிர்தப்பிய அமெரிக்க சுற்றுலாப் பயணி
Published on

கடலில் நீந்திக்கொண்டு இருந்த பெண் ஒருவரை, சுறா மீன் தாக்கியதில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஈக்வடார் நாட்டின் கலப்பாகோஸ் தீவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்குலக நாடுகளில் கோடை கால விடுமுறை காலங்களில் பயணங்களுக்கும் கேளிக்கை மையங்களுக்கும் பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள கலப்பாகோஸ் தீவில், அமெரிக்காவைச் சேர்ந்த 42 வயது டெலியா இரியார்டே கடலில் நீச்சல் அடித்து விளையாடிக்கொண்டு இருந்தார்.

திடீரென அவர் நீந்திக்கொண்டு இருந்த இடத்தில் தண்ணீர் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால், அடுத்த நிமிடம் காலை அசைக்கவே அவரால் முடியவில்லை. அப்போதுதான் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

பெரிய சுறா ஒன்று அவரைத் தாக்கியுள்ளது, அவருக்குத் தெரிந்தது. அதற்கு முன் இவ்வளவு அருகில் தான் சுறாவைப் பார்த்ததே இல்லை என்கிறார், அவர்.

சுதாரித்து கால்களை விரைவாக அசைய முயன்றபோது, அவரின் வலது கால் மரத்துப் போயிருக்கிறது.

சுற்றிலும் பார்த்தபோது அந்த இடமே ரத்தச் சிவப்பாக இருந்தது என அதிர்ச்சி விலகாதபடி ஊடகங்களிடம் கூறுகிறார், டெலியா.

நல்வாய்ப்பாக, சாண்டா குரூஸ் தீவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் உடனடியாக எடுத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருடைய வலது காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நல்லபடியாக வலது காலையே அந்தச் சுறா கடித்துத் தின்றிருக்குமோ என அச்சமடைந்தேன்; அப்படி ஏதும் நிகழவில்லை; ரத்தப்போக்கு அதிகம் ஆகிவிட்டபோதும் சுயநினைவோடு இருக்கமுடிந்ததே பெரிய விசயம் என இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறார், டெலியா.

பொதுவாக, வடக்கு, தெற்கு அமெரிக்க நாடுகளின் கடற்கரைகளில் சுறாக்கள் மனிதர்களைத் தாக்குவது அண்மையாக அதிகரித்துவருகிறது. கடந்த மாதம் 5ஆம் தேதிவாக்கில் நியூயார்க் மாநிலத்தில் லாங் தீவு கடற்கரையில் சுறாக்கள் கூட்டம் கூட்டமாகத் திரிவதைப் பார்த்த பூங்கா துறையினர் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

ஆனால் அதையும் மீறி அங்கு நீந்தி விளையாடிய இரண்டு பேரை சுறாக்கள் தாக்கின. அதற்கு முந்தைய நாளன்றுதான் அப்பகுதியில் 50 மணற்சுறாக்கள் கூட்டமாக உலாவியதை கடற்பூங்கா துறையினர் பார்த்து, எச்சரிக்கை செய்திருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com