காணாமல் போன இந்திய சிறுமியை இரண்டரை மாதத்துக்குப் பிறகு கண்டுபிடித்த அமெரிக்க போலீசார்!

காணாமல் போன இந்திய சிறுமியை இரண்டரை மாதத்துக்குப் பிறகு கண்டுபிடித்த அமெரிக்க போலீசார்!

மீப காலமாக அமெரிக்கவின் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. அப்படித் தனது தந்தைக்கும் வேலை போய்விட்டால் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லக்கூடும் என்கிற பயத்தில், 15 வயதான தன்வி மருபல்லி என்கிற சிறுமி கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தனது வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார். இது குறித்து காவல்துறையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதனால் தன்வி மருபல்லியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து தன்வியின் தந்தை பவன்ராய் கூறுகையில், 'ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் எனது மனைவிக்கு வேலை போய்விட்டது. எனக்கும் எப்போது வேலை போகும் என்று தெரியாது என்பதால், மனைவியையும், தன்வியையும் முதலில் இந்தியா போய்விடும்படி என்று நான் கூறினேன். ஆனால், தன்வி இந்தியா செல்ல மறுத்து விட்டாள். அதோடு, அவளுக்கு அமெரிக்கா மிகவும் பிடித்திருந்ததால் அவள் அமெரிக்காவிலேயே இருக்கப்போவதாகவும் கூறி வந்தாள். எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பிடிவாதமாக இருந்ததோடு, இப்படிச் செய்துவிட்டாள்' என்று அவர் கூறி இருந்தார்.

தன்வி காணாமல் போன சம்பவம் அமெரிக்க காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் முயற்சியை கைவிடாத காவல் துறையினர் 75 நாட்களுக்கு பிறகு தன்வி தற்போது புளோரிடாவில் இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளனர். ஆர்கன்சாஸில் பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுமியை, அமெரிக்க காவல் துறையினர், அவள் வீட்டிலிருந்து 1,600 கி.மீ தொலைவில் உள்ள புளோரிடாவில் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க காவல்துறை அதிகாரி வில்லியம் டேப்லி கூறுகையில், ’’தன்விக்கு நூலகத்தின் மீதான ஆர்வமே அவரைக் கண்டுபிடிக்க வழிவகுத்து. காரணம், புளோரிடாவின் தம்பாவில் உள்ள ஒரு உள்ளூர் நூலகத்தில் அவள் பணிபுரிந்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் தங்களால் அவளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவள் ஒரு 'லிட்டில் ராம்போ.' அதனால்தான் அவளால் இத்தனை நாட்கள் உயிர் பிழைக்க முடிந்தது. அவள் மிகவும் பாதுகாப்பாக நீண்ட மலையேற்றத்தை எல்லாம் கடந்து வந்துதான் இங்கு பணிபுரிந்து வந்துள்ளாள்'’ என்று அவர் கூறினார். சிறுமி தன்வியை கண்டுபிடிப்பவர்களுக்கு 25000 டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com