
Premature baby அல்லது குறை பிரசவத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானம் அளித்து இரண்டு முறை உலக சாதனை படைத்திருக்கிறார் ஓர் அமெரிக்கப் பெண்.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள அலோகாவில் வசித்துவருபவர், எலிசபத் ஆண்டர்சன் சியாரா. இரு குழந்தைகளின் தாயான இவர், உலகத்திலேயே அதிகமான குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் அளித்தவர் எனும் பெயரைப் பெற்றுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் 2018 ஜூன் மாதம் 20 ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில், ஆயிரத்து 599 லிட்டர் (1,599.68) தாய்ப்பாலை இவர் தானமாக வழங்கி உள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான குறை பிரசவத்தில் பிறந்த பலவீனமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
எலிசபத்தின் இந்த தாய்ப்பால் தானமானது, கின்னஸ் சாதனையாகப் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. ”இந்தக் கணக்கு 2015 முதல் 2018வரையில் மட்டும் எடுக்கப்பட்டதுதான். மீதமுள்ள ஆண்டுகளில் தானம் செய்யப்பட்ட தாய்ப்பால் எண்ணிக்கை இதில் சேர்க்கப்பட வில்லை.” என்று கின்னஸ் அமைப்பிடம் எலிசபத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வட்டாரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் எலிசபத்தின் தாய்ப்பால் மூலம் ஏராளமான குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர் என்று கின்னஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தானமாக அளித்த தாய்ப்பாலின் அளவானது 3.5 இலட்சம் அவுன்ஸ் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எலிசபத்துக்கு ஹைப்பர் லாக்டேசன் எனும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் நிலையால் அவருக்கு ஏராளமான அளவில் பால் உற்பத்தி ஆகிறது. ஏராளமான ஹைப்பர் லாக்டேசன் காரணமாக தாய்ப்பால் பெருக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் எலிசபத் கின்னஸ் அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை, போர்ட்டோரிகா நாட்டில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தானம் அளித்துள்ளார். அந்தக் குழந்தையின் தாயார் மகப்பேறின்போது உயிர் இழந்துவிட்ட சோகம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் தந்தை தாய்ப்பால் வங்கி ஒன்றில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பாலை வாங்கி கொடுத்துவந்துள்ளார். அந்த சமயத்தில் போர்ட்டோ ரிகாவே கடும் சூறாவளி தாக்கத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தையின் தந்தை சமூக வலைத்தளம் மூலம் பதிவிட்ட செய்தி எலிசபத்தை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து
எலிசபத்தின் கணவருக்கும் போர்ட்டோ ரிகாவே சொந்த நாடு என்பதால், எலிசபத் அந்த நாட்டுக்கே சென்று பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் தானம் செய்துள்ளார். அதன்பிறகுதான் ஹைப்பர் லாக்டேசன் பாதிப்பினால் தனக்கு அதிகப்படியாக சுரக்கும் தாய்ப்பாலை தானமாக வழங்கும் யோசனை எலிசபத்திற்கு உருவாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தாய்ப்பால் தானம் செய்துவரும் எலிசபெத், தன்னைப்போல் ஹைப்பர் லாக்டேசனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார். அதிகப்படியாக தாய்ப்பால் சுரப்பதை கண்டு அச்சப்படுவதைவிட அதனை இயற்கை பேரிடர், தாயை இழந்த குழந்தைகளுக்கு தானமாக வழங்க ஹைப்பர் லாக்டேசன் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் முன்வரவேண்டும் என்கிறார் எலிசபத். இதன்காரணமாகவே உலகளவில் தாய்ப்பால் தேவதை என அன்போடு அழைக்கப்படுகிறார் எலிசபத்.