மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமித்ஷா உத்தரவு!

மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமித்ஷா உத்தரவு!

மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்முறை, கலவரத்துக்கு இதுவரை 79 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 200-க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 30,000-த்துக்கும் மேலானவர்கள் வேறு இடங்களில் பாதுகாப்புதேடி தஞ்சமடைந்துள்ளனர்.

இதனிடையே மணிப்பூரில் கடந்த நான்கு நாட்களில் எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையில் 40 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக முதல்வர் பீரேன் சிங் தெரிவித்துள்ளார். ஆனாலும் புதிதாக ஏற்பட்ட வன்முறைக்கு 5 பேர் பலியானார்கள். தவிர 12 பேர் காயமடைந்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அங்கு அமைதி ஏற்படுத்தும் முகமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வந்தார்.

முதல்வர் பீரேன் சிங், மாநில ஆளுநர் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சரவை சகாக்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும், நிவாரண உதவிகளை துரிதப்படுத்தவும், வன்முறையில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வதந்திகளை முறியடிக்க பி.எஸ்.என்.எல். தொடர்பு வசதியை மீண்டும் ஏற்படுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குக்கி பழங்குடியினத் தலைவர்களுடன் பேசிய அமித்ஷா, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.

அதே நேரத்தில் அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 15 நாட்களுக்கு அமைதியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், பழங்குடியினப் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்கமுடியாது என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனிடையே மணிப்பூரில் வன்முறை கலவரத்தை கட்டுப்படுத்த பா.ஜக. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது விஷயத்தில் தலையிடுமாறும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை காங்கிரஸ் குழு கோரியுள்ளது.

வன்முறை குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com