அதிமுக-விற்கு கெடு விதித்த பாஜக: அதிர்ச்சியில் இபிஎஸ்.!

EPS shocking
ADMK -BJP
Published on

மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் தமிழகத்திற்கு வருகை புரிந்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தேர்தல் ஆலோசனை மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார் அமித் ஷா.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க ஜனவரி மாத இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணியை பலப்படுத்த முடியாமல் எடப்பாடி பழனிசாமி தடுமாறுகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வந்த அமித் ஷா-வை சந்திக்காதது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அமித்ஷாவை இரண்டு முறை நேரில் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி கட்ட முடிவு எட்டப்படாத நிலையில், பாஜக 50 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதிமுக தரப்பில் பாஜகவிற்கு 23 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க பாஜக விருப்பம் தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது.

ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் சிலர் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இன்னும் எந்தக் கூட்டணியிலும் சேராமல் உள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதில் விருப்பமில்லை என்றே தெரிகிறது. ஆனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக - பாஜக கூட்டணியில் இணைக்க அமித் ஷா மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் 90% பேர் தவெக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக - பாஜக கூட்டணியில் இணைத்து, கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். கூட்டணி நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எட்டும் வரை, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மாட்டேன் எனவும் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க இபிஎஸ் சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய முடியாமல் இருப்பது தான், தற்போது அதிமுகவுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன் பிறகே தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகே எந்தெந்த கட்சிகள், எந்தெந்த கூட்டணிகள் இணையும் என்ற முடிவு தெரிய வரும்.

இதையும் படியுங்கள்:
பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் 8 பிரச்னைகள் - தவிர்ப்பது எப்படி?
EPS shocking

பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் இன்னும் கூட்டணி குறித்த தகவல்களை வெளியிடவில்லை. நாளை மறுதினம் ஜனவரி 9-ம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்புகளை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீடித்து வரும் பிரச்சனையால் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கேற்ப மற்ற கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக மேலிடம்

இதையும் படியுங்கள்:
செரிமானம் தூண்டும் வெற்றிலை கூந்தலையும் பராமரிக்குமாமே! எப்படி?
EPS shocking

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com