அம்மாடியோவ்... இத்தனை கோடியா? அதிகாரிகள் அதிர்ச்சி.

அம்மாடியோவ்... இத்தனை கோடியா? அதிகாரிகள் அதிர்ச்சி.

னைத்து விதமான திருட்டையும், கடத்தலையும்  எல்லா இடங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவி கோடிகோடியாக வண்டல் மண் கடத்தப்பட்ட செய்தி அதிகாரிகளை மட்டுமல்ல நம்மையும் அதிர்ச்சி கொள்ள வைக்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் இந்த அதிர்ச்சிக்கடத்தல் அரங்கேறி தற்போது ஆட்சியரின் கவனத்துக்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஏரி, குளம் குட்டைகளில் ரூபாய் 80 கோடி மதிப்புள்ள வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

      இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 336 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 379 ஏரிகள் என மொத்தம் 715 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள், குளம், குட்டை மற்றும் ஓடைகளிலிருந்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுடன் பொதுமக்களும் தங்களின் தேவைக்காக குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரம் மட்டும் வண்டல் மண் எடுத்துக் கொள்வதற்கு மாவட்டம் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    ஆனால் சில மர்ம நபர்கள் விவசாய பயன்பாட்டுக்கு என்று அனுமதி பெற்று வண்டல் மண்ணை கடத்திச் சென்று அவற்றை வேறு பயன்பாட்டுக்காக விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறைகேட்டிற்கு காவல் மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

      இதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவைத்து மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் குட்டை மற்றும் ஓடைகளில் எவ்வளவு வண்டல் மண் அள்ளப்பட்டு உள்ளது, எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களாக இந்த மண்ணள்ளும் பணி நடைபெற்றுவருகிறது போன்ற தகவல்களையும் எடுக்கப்பட்ட மண்ணின் அளவு என்ன என்பதை கணக்கீடு செய்து தகவல் தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

     இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர்  மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏரிகள் குளம் குட்டைகள் மற்றும் ஓடைகளை நேரில் ஆய்வு செய்து அங்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப் பட்ட அளவு, கூடுதலாக எடுக்கப்பட்ட மண்ணின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

      அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரூபாய் 80 கோடி மதிப்பிலான வண்டல் மண் அள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர்  இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மேற்கொண்டார். அதன்படி எங்கெங்கு வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது. யார் யாருக்கு அதில் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து அவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்  நிலையத்தில் புகார் கொடுத்து அதன் விவரத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

     இந்த உத்தரவால் வண்டல் மண் கடத்தல் மற்றும் முறைகேடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தவிர இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காலம் காலமாக இது போன்ற கடத்தல்களை கேள்விபட்டே வருகிறோம். அரசுதான் கடுமையான நடவடிக்கைகள் மூலம் இது போன்ற செயல்களைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

      இது போன்ற முறைகேடான கடத்தல்களைத் தடுக்க வேண்டிய இடத்தில் உள்ள மக்கள் பணியாளர்களே இதற்கு உடந்தையாக இருப்பது உண்மையில் கண்டிக்கத்தக்கது. என்றுதான் இது போன்ற  நேர்மையற்ற மனிதர்கள் திருந்துவார்களோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com