தஞ்சை, முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அர.தங்ராசன். தற்போது 80 வயதாகும் இவர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மின்சார வாரிய கூடுதல் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கல்யாணி. இவருக்கு வயது 71. அர.தங்கராசன் தான் இளம் வயதில் படித்த பள்ளிகளுக்கு உதவும் வகையிலும், தற்போது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன் பெறும்படியும், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெயரில் 2 லட்சம் ரூபாயையும், நடுவிகுறிச்சி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியின் பெயரில் 1 லட்ச ரூபாயையும் பேராவூரணியில் உள்ள தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தி இருக்கிறார்.
அந்த வைப்புத் தொகை மூலம் வரும் வட்டியைக் கொண்டு, அந்தப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறுபவர்களுக்குப் பிரித்து ரொக்கப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார். மொத்தமாக மூன்று லட்ச ரூபாயை இந்தப் பள்ளிகளின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தி இருக்கும் இவர், அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணம் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்குக் கிடைக்கும்படியான ஏற்பாட்டை செய்து, அந்த வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
இந்த நெகிழ வைக்கும் சம்பவம் குறித்து கூறிய தங்கராசன், “நான் படித்த பள்ளியை கௌரவிக்கும் விதமாக இதைச் செய்து இருக்கிறேன். எனது காலத்துக்குப் பிறகும் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த வைப்புத்தொகை நிதி வரும் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.