தொன்மையான பிராமி, வட்டெழுத்துக்களில் திருக்குறளும் ஆத்திச்சூடியும் கற்பிக்கும் ஆசிரியர்.

தொன்மையான பிராமி, வட்டெழுத்துக்களில் திருக்குறளும் ஆத்திச்சூடியும் கற்பிக்கும் ஆசிரியர்.
Published on

செம்மொழி அந்தஸ்தைப் பெற்றிருக்கும் உலகின் மூத்த மொழியான தமிழை வளர்க்க தாய்மொழியில் ஆர்வமுள்ளோர் பாடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் சத்தமே இல்லாமல் தன்னிடம் படிக்கும் மாணவச்செல்வங்களுக்கு தான் கற்ற பழமையான தமிழைக் கற்றுத்தந்து அவர்களை எழுத வைக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் எம். என்.பட்டி அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்தான் தமிழில் உள்ள திருக்குறள் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் போன்றவற்றை வட்ட எழுத்து சோழர்கால தமிழ் எழுத்துக்களில் எழுதி அசத்தி வருகின்றனர். நமக்கு அறிமுகமாகும் முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் பல்வேறு வடிவங்களில் தமிழ் எழுத்துகளை பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். அந்த  எழுத்துமுறை பிராமி எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே  தமிழகத்தில் பிராமி எழுத்துக்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பிராமி எழுத்துகளுக்கு பின்பு வட்ட எழுத்து  கிரகந்த எழுத்து, சோழர் காலத்து தமிழ் (கி.பி எட்டாம் நூற்றாண்டு) தற்கால தமிழ் எழுத்து (கி.பி பத்தாம் நூற்றாண்டு) என பல மாறுதல்களையும் சீர்திருத்தங்களையும் தமிழ் மொழி பெற்று தற்போது, மேலும் புதிய பரிணாமங்களுடன் தமிழ்மொழி சிறப்பாக வளர்ந்து வருகிறது.

ஆயினும் முன்னோர் பயன்படுத்திய தொன்மையான எழுத்துக்களை நம் இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்தி அதைக் கற்றுத் தர இன்னும் பெரிய அளவில் யாரும் முயலவில்லை என்றே சொல்லவேண்டும். அந்த நிலையை மாற்ற தொன்மை எழுத்தான பிராமி எழுத்துக்களை தற்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் திருக்குறளை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறை அச்சிட்டுள்ளது. இதேபோல் பலரும் பிராமி எழுத்துக்களில் திருக்குறளை எழுதியிருந்தாலும் அதன் பின்பு வந்த வட்ட எழுத்து, கிரகந்த எழுத்து , சோழர்காலத் தமிழ் ஆகியவற்றை கற்றுக்கொண்டு எந்த நூல்களையும் யாரும் எழுதவில்லை.

இந்த நிலையை மாற்றியுள்ளார்  சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் எம். என். பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் அன்பரசி. இவரிடம் பயிலும் ஐந்தாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவ மாணவிகள் பிராமி பட்டெழுத்து சோழர் காலத்து தமிழ் ஆகியவற்றை கற்றுக்கொண்டு திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவற்றை எழுதி அசத்தியுள்ளனர். மூன்று வகை தமிழ் எழுத்துக்களிலும் எழுதியதை சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் புத்தகமாக அச்சிட முடிவு செய்யப் பட்டுள்ளதாக இவற்றைப் பயிற்சியளிக்கும் தமிழ் ஆசிரியர் அன்பரசி தெரிவித்துள்ளார்.

மேலும் “பள்ளி கல்லூரி காலங்களில் நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் இருந்தது. குறிப்பாக மேற்கு சத்ரபதி ருத்ரசேனா- 3 (கிபி 348 378) நாணயத்தில் உள்ள பிராமி எழுத்துக்களை பார்த்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்தது. சென்னையில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து தமிழில் உள்ள பிராமி வட்டெழுத்து கிரகந்த  எழுத்து, சோழர் காலத்து தமிழ் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். எனது பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்து வருகிறேன். மேச்சேரி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் எம். என்.பட்டி. பள்ளி தகவல் பலகையில் தினமும் ஒரு திருக்குறளை பிராமி வட்டெழுத்து, சோழர் காலத்து தமிழ் எழுத்துக்களினால்  பள்ளி மாணவர்கள் எழுதிய வருகின்றனர். பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தலைவராக பள்ளியின் தலைமை ஆசிரியை பகவத் கீதா உள்ளார். இந்த மன்றத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வெட்டுகள் நடுகற்கள் நாணயங்கள் செப்பேடுகள் சிற்பக்கலை ஆகியவற்றை கற்றுக்கொடுத்து வருகிறோம். இதில் ஐந்தாம் வகுப்பு மாணவி தர்ஷனா ஏழாம் வகுப்பு மாணவர்கள் நவீனா ஸ்ரீ, தமயங்கி, நவீனா, வேத ஸ்ரீ, நித்தீஸ், ரிஜித் ஆகிய ஏழு பேரும் பிராமி பட்டெழுத்து சோழர் காலத்து தமிழ் ஆகிய எழுத்துக்களில் திருக்குறளை எழுதியுள்ளனர். அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் ஆகியவற்றையும் எழுதி வருகின்றனர்”என்றார்.

மாணவர்கள் கூறும்போது “பள்ளியில் நாணயங்களின் கண்காட்சியின் போது அதிலுள்ள எழுத்துக்கள் குறித்து ஆசிரியரிடம் கேட்டோம். ஒவ்வொரு எழுத்துக்களின் விபரம் வரலாறு ஆகியவற்றை தெரிவித்தனர். அந்த எழுத்துக்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. பின்னர் பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் வகுப்புகளில் கலந்து கொண்டு தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொண்டு தமிழில் உள்ள நூல்களை எழுதுகிறோம்” என்றனர்.

உண்மையில் இந்தப் பள்ளியை நாமும் மனதாரப் பாராட்டுவோம். தமிழைக் காப்போம் என்று வெறுமனே சொல்லாமல் பழந்தமிழைக் காக்கும் எண்ணம் மிகவும் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com