180 பவுன் நகைகளை அபகரிக்க முயற்சியா? சபரிமலை ஐயப்பன் கோவிலில் பரபரப்பு விசாரணை.

180 பவுன் நகைகளை அபகரிக்க முயற்சியா? சபரிமலை ஐயப்பன் கோவிலில் பரபரப்பு விசாரணை.
Published on

பரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு காலத்தில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட 180 பவுன் நகைகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளதால், இந்த தாமதமானது, அந்த நகைகளை அபகரிக்க நடந்த முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

      மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் தேதி நடந்த பூஜை உடன் மண்டல காலம் நிறைவடைந்தது. இதன் பின் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. மீண்டும் ஜனவரி 20ஆம் தேதி காலை நடை சாத்தப்பட்டது. அத்துடன் மகர விளக்கு காலம் நிறைவடைந்தது.

      கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டதால் இம்முறை சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததையும் கோவில் வருமானம் அதிகரித்ததையும் பார்த்தோம். மண்டல மகர விளக்கு காலத்தில் மொத்த வருமானம் ரூபாய் 370 கோடியை தாண்டியது. சபரிமலை கோவில் வரலாற்றில் மண்டல மகர விளக்கு காலத்தில் வருமானம் 350 கோடியை தாண்டுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்புகளும் அதிகரித்தது. இதுவரை 400 பவுன் தங்கம் கிடைத்துள்ளதே இதற்கு சான்று.

      கோவிலுக்கு காணிக்கையாக கிடைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை நடை சாத்தப்பட்ட ஒரு வாரத்துக்குள் ஆரன்முளாவில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது முறை. மகர விளக்கு காலமான டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை மட்டும் காணிக்கையாக 180 பவுன் தங்கம் கிடைத்துள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின் ஒரு வாரத்துக்குள் இந்த தங்கம் ஆரன்முளாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் 180 கிலோ தங்கம் ஆரன்முளாவில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டது. அதுவரை இந்த தங்கம் சபரிமலையில் இருந்ததா அல்லது வேறு எங்காவது வைக்கப்பட்டு இருந்ததா என தெரியாததால் பக்தர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

     காணிக்கையாக கிடைத்த தங்கம் இதுவரை பாதுகாப்பு அறைக்கு  கொண்டு செல்லப்படவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியதால்  இது குறித்து விசாரணை நடத்த திருவாபணம் ஆணையாளர் பைஜூவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போட்டு தலைவர் அனந்தகோபன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் 180 பவுன் தங்கம் சபரிமலையில் இருந்து ஆரன்முளாவிற்கு தாமதமாக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. பக்தர்களின் சந்தேகத்தை போக்க எதனால் இந்த தாமதம் அதுவரை எங்கு இந்த தங்கம் வைக்கப்பட்டிருந்தது போன்றவைகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com