ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் இன்று ஐந்துக்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் இருபதுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சிலர் மண்ணை அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் இப்படி மண் அள்ளுவதற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதாக என்று கேட்டார். அனுமதி இன்றி மண் அள்ளப்படுவது தெரிந்ததும் அதற்கு இன்பத்தமிழன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனுக்கும் அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், சற்று நேரத்தில் மண் கடத்தல்காரர்கள் இன்பத்தமிழனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். அதையடுத்து, மண்ணை அள்ளிக்கொண்டு வந்த டிராக்டரை வழி மறித்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது டிராக்டரை ஓட்டி வந்தவர், இன்பத்தமிழன் மீது டிராக்டரை ஏற்ற முயன்றதாகச் சொல்லப்படுகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் மீது டிராக்டர் விட்டு ஏற்ற முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.