வளர்ச்சிக்கு உதவாத வெற்று பட்ஜெட் ! சீமான் ஆவேசம்!

பட்ஜெட்
பட்ஜெட்
Published on

மத்திய அரசின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய ஒன்றிய பாஜக அரசின் 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எவ்வித திட்டங்களும் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப் போலவே இந்த நிதிநிலை அறிக்கையும் மக்களை ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தியது வரவேற்க கூடியது என்றாலும், புதிய வரி முறைக்கு மட்டுமே அது பொருந்தும் என்று அறிவித்திருப்பது, நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலேயாகும். புதிய வரிமுறை என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லாத வரிமுறையாகும். எனவே, வருமான வரி வரம்பு உயர்வு என்பது புதிய வரிமுறைக்குள் மாத சம்பளதாரர்களை தள்ளும் சூழ்ச்சியேயாகும்.

அதுமட்டுமின்றி, இப்புதிய வரிமுறை திணிப்பால் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற மக்களின் மனப்பான்மை குறைவதோடு, நம்பகமான அரசு நிதி நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்வதும் வெகுவாக குறையும். இதனால் நாட்டின் கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்.

இந்த நிதிநிலை அறிக்கையின்படி தனிநபர் வருமானவரி 9 லட்சம் கோடிகள் என்றும், பெருநிறுவன வருமான வரி வருவாய் 9.23 லட்சம் கோடிகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது, மாதத்திற்கு சில ஆயிரங்கள் வருமானம் ஈட்டும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களையும், பல லட்சம் கோடிகள் லாபமீட்டும் ஒரு சில பன்னாட்டு கூட்டிணைவு பெருநிறுவனங்களையும் ஒரே தராசில் வைப்பதற்கு சமமானச் செயலாகும். இதுவே, இப்புதிய வரிவிதிப்பு முறையானது மிக மோசமான வரிவிதிப்பு முறை என்பதற்கான சான்றாகும்.

தங்கம் என்பது பாமர மக்களால் சிறுக சேர்க்கப்படும் முதலீடாகும். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது, ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலையை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொது விநியோக கடைகளில் இலவசம் தொடரும் என்று சொல்லிவிட்டு உணவு மானியத்தை 31% விழுக்காடு குறைப்பது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

கைபேசி மற்றும் மின்னணு இயந்திரங்களுக்கான சுங்கவரியை குறைத்துவிட்டு, எரிபொருள்களுக்கான வரிகளை குறைக்காமல் தவிர்த்திருப்பது எளிய மக்களை வஞ்சிக்கும் செயல். எரிபொருள் மீதான மானியத்தை 75% குறைத்துவிட்டதும், சிலிண்டர் விலையை குறைக்காமல் விட்டுள்ளதும், உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி, கடுமையான பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை என்பது வழக்கம்போல ஏழை மக்களை வஞ்சிக்கக்கூடிய, நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று பட்ஜெட் என சீமான் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com