ஒரு ஆட்சி நடக்கும் போது, அதை நேர்படுத்த நிச்சயமாக ஒரு எதிர்கட்சி தேவை. இங்கே தமிழகத்தில், திரு.எடப்பாடி பழநிசாமி அவர்களின் தலைமையில், அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. அவ்வப்போது, திரு.எடப்பாடி பழநிசாமி அவர்கள், ஆளும் அரசின் குறைபாடுகளைச் சுற்றிக் காட்டுவதும், விமர்சிப்பதும் அடிக்கடி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அதை முன்னெடுத்து, அ.தி.மு.க.வினர், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என்று நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது,'முதியோர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி விட்டு, எழுதாதப் பேனாவிற்கு, 80 கோடி செலவிடுவதா?' எனறு உரத்தக் குரலெழுப்பியிருக்கிறார், திரு.எடப்பாடி பழநிசாமி அவர்கள். இது மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தக்கூடும்.
முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, அவர்களின் நினைவாக, 80 கோடி செலவில், கடலில் பேனா ஒன்று அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். இது பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. எவ்வளவோ நிதிப் பற்றாக்குறை பிரச்னைகள் இருக்கும்போது, இவ்வளவு செலவில் நினைவுசின்னம் அமைப்பதை முதல்வர் அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் பல குரல்கள் ஒலித்தன. இதைக் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்தன.
இந்த நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்கள் இதை எதிர்த்து பகிரங்கமாகக் குரல் கொடுத்திருக்கிறார். முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதும் ஏனோ? என்றும் வினா எழுப்பியிருக்கிறார்.
இதற்கு 'நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, இளைஞர் அணி செயலாளராக இருக்கும், ராஜீவ் காந்தி அவர்கள், "பச்சைப் பொய் பேசாதீர்கள் பழநிசாமி அவர்களே, முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதை நிரூபிக்க முடியுமா?" திரு.எடப்பாடி பழனி அவர்களைப் பார்த்து, எதிர்க் கேள்விக்கணை தொடுத்திருக்கிறார்.
இதற்கு அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் திரு சத்யன் அவர்கள், தனது 'டிவிட்டர்' பக்கத்தில் "மகளிருக்கு 1000 ரூபாய், நீட் தேர்வு ரத்து, முதியோருக்கு உதவித் தொகை 1500 ரூபாய் என்று சொன்னவர்தானே உங்கள் பச்சைப் பொய் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். முதியோருக்கு ஓய்வூதியத்தை நிறுத்துவது, பெற்றோரைப் பட்டினி போடுவதைப் போன்றது. சிலிண்டர் வைத்திருந்தால், பாகப்பிரிவினை செய்திருந்தால், நகைக்கடன் பெற்றிருந்தால், ரேஷனில் சீனி அட்டை வைத்திருந்தால் என்றப் புதியக் கட்டுப்பாடுகளை விதித்து முதியோர் ஓய்வூதியம் இல்லாமல் செய்ததுதான், உங்கள் விடியா அரசின் சாதனை. தி.முக.வினருக்கு மனசாட்சியே கிடையாது. என்றாலும் சீமானிடம் இருந்தவன் என்ற முறையில் கேட்கிறேன். எங்கள் பாட்டியின் சுருக்குப்பைக்கு செல்லும் 1000 ரூபாயை வைத்துத்தான் நீங்கள் கோடிகளில் வாட்சு வாங்க வேண்டுமா?, 80 கோடி செலவில், எழுதாத பேனாவிற்கு செலவிட வேண்டுமா?", எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதியோர் ஓய்வூதியத்தின் புதியக் கட்டுப்பாடுகளின் மூலம், ஓய்வூதியத்தை நிறுத்தியது குறித்து, அ.தி.மு.க.வினரும், சமூக வலைத்தளங்களும் ஓங்கிக் குரல் எழுப்புகின்றன. இது அரசின் கவனத்திற்கு சென்றால் சரி.
சுகுமாரன் கந்தசாமி