

மத்திய ஆயுதப் போலீஸ் படையில் தற்கொலை செய்துகொள்வோர், கூட்டாளிகளால் கொல்லப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் நியமித்த பணிக்குழு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவமதிப்பு, மன உளைச்சல் மற்றும் விடுமுறை பெறுவதில் பிரச்னை ஆகியவையே இதற்கு காரணம் என்று சொல்லபடுகிறது.
மத்திய ஆயுதப் போலீஸ் படையிலும், அசாம் ரைஃபிள்ஸ் படையிலும் ஜவான்கள் தற்கொலை செய்துகொள்வது மற்றும் ஒரு ஜவான் தனது கூட்டாளியையே சுட்டுக் கொல்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு ஜவான்களிடம் அதிகரித்து வரும் மன அழுத்தமே முக்கிய காரணமாகும். கடுமையான பணி நிபந்தனைகள், கடும் விமர்சனம், வேலை செய்யும் இடத்தில் அவமதிப்பு, ஆயுதங்கள் கையில் இருப்பது ஆகியவைவும் இதுபோன்ற செயலுக்கு முக்கிய காரணமாகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் 1,205 ஜவான்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது சராசரியாக ஆண்டுக்கு 125 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் மட்டும் 97 படைவீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2019 -இல் இது 133 ஆகவும்,
2020 இல் இது 149 ஆகவும் அதிகரித்துள்ளது. 2021 இல் இது 153 ஆக உயர்ந்துள்ளது.
கடினமான வேலைகளில் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வீரர்கள் வேலை செய்யும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போதெல்லாம் தேர்தல் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார் அவர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக கணிசமான மத்திய படையினரை அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் அவர்களின் பணிச்சுமை கூடியுள்ளது. பணிச்சுமை அதிகரித்த அளவு வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஒரு இடத்தில் தேர்தல் பணி செய்துவிட்டு திரும்பியவர்களையே மீண்டும் வேறு இடத்துக்கு அனுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு இடத்தில் தேர்தல் என்றால் ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆயுதப் படையினர் அங்கு பணிபுரிய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு போதிய பயிற்சியும் அளிக்க முடியாமல் போகிறது என்றார் அவர்.
சமீபத்தில் ஓடிஸாவில் அமைச்சர் ஒருவர், பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும்
புலனாய்வுத்துறை இயக்குநர் தபன் டேகா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டா்.
இந்த சம்பவங்களை அடுத்து வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்கு போடப்படும் அதிகாரிகளுக்கு அவ்வப்போது மனநல ஆலோசனை அளிக்க மனநல மருத்துவர் தேவை என்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை விளம்பகரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறதா, அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பது குறித்து இனி அவ்வப்போது ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சி.ஆர்.பி.எப். படைப்பிரிவினர் மட்டுமல்ல இந்தோ திபெத்தியன் எல்லைப் படையினர், தேசிய பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கும் இதே பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், அவர்களுக்கு அவ்வப்போது பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. காணொளி காட்சி மூலம் இவை நடத்தப்பட்டாலும் பணிச்சுமையால் இந்த பிரச்னைகள் தீர்க்கப்படாமலே உள்ளன என்கிறார் அவர்.