ஆப்பிள் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவி.

ஆப்பிள் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவி.
Published on

"ஆப்பிள் ஸ்விப்ட் ஸ்டுடண்ட் சேலஞ்ச்" என்னும் பெயரில் ஆப்பிள் நிறுவனமே நேரடியாக உலகம் முழுவதும் 30 நாடுகளில் நடத்திய ஆப் உருவாக்கும் போட்டியில், இந்திய மாணவி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் அந்த நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பு OS-களே பயன்படுத்தப்படும். இந்த OS, Swift programing language பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இந்த நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கென்று பிரத்தியேகமான ஆப் உருவாக்கும் போட்டி, ஆப்பிள் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்தப் போட்டியை "ஆப்பிள் ஸ்விப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச்" என்பார்கள். மொத்தம் 30 நாடுகளில் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்தப் போட்டி நடத்தப்படும். இதில் மொத்தம் 375 மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பங்கேற்று செயலிகளை உருவாக்குவார்கள். 

இந்த செயலிகள் விளையாட்டு, சுகாதாரம், பொழுது போக்கு, சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் டாப் மூன்று மாணவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஆப்பிள் ஸ்விப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் போட்டி உலகம் முழுவதும் நடந்தது. 

இதில் இந்தியா, ஜார்ஜியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த போட்டியாளர்கள் வெற்றியாளராகத் தேர்வு செய்யப் பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த வெற்றியாளரின் பெயர் அஸ்மி ஜெயின். இந்த மாணவி உருவாக்கிய ஆப் மூலமாக பார்வைத்திறன் குறைபாடுள்ள நபரின் கண் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். அதனால் சரியான சிகிச்சையளித்து பார்வையை மீட்க உதவலாம். 

அஸ்மி ஜெயின், மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள மெடி கேப்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவியாவார். தனது வெற்றி குறித்து அவர் கூறுகையில்," நான் கண்டுபிடித்த இந்த செயலி மூலமாக, என் தோழியின் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாமாவின் வாழ்க்கையில் நம்பிக்கை கிடைத்துள்ளது. அவரைப்போல பாதிக்கப்பட்ட அனைவரது வாழ்க்கையிலும் நம்பிக்கை கிடைக்க வேண்டும். இந்த செயலியை ஆப் ஸ்டோரில் வெளியிட ஆசைப்படுகிறேன். இந்த ஆசை விரைவில் நிறைவேறும்" எனத் தெரிவித்தார்

இத்தகைய மாபெரும் போட்டியில் அவர் வெற்றி பெற்றதற்கு திறமை மட்டுமின்றி, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட, தன் தோழியின் மாமாவுக்கு உதவும் நோக்கில் உருவாக்க நினைத்த நல்ல உள்ளமும் முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com