செல்வி ஜெ. ஜெயலலிதா தமிழக அரசியலில் இருந்து மறைந்தாலும் கூட அவரை மூலமாகக் கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிது புதிதாக பிரச்சனைகளும் வழக்குகளும் கிளர்ந்தெழுந்து கொண்டே தான் இருக்கின்றன. முன்னதாக ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ, சட்டப்பூர்வ வாரிசுகள் இவர்கள் தான் என சென்னை ஐ கோர்ட் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ. தீபக் ஆகியோரை அறிவித்து விட்டது. ஆனாலும் ஜெ வின் வாரிசுரிமைப் போட்டியோ இன்னமும் தீர்ந்தபாடில்லை. அவர் மறைந்து 6 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது வாரிசு நான் தான் என்று கூறிக்கொண்டு யாராவது ஒருவர் வருவதும், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து பரபரப்புக் கிளப்புவதிலும் இப்போதும் ஒரு குறைச்சலும் இல்லை.
இப்போது யார் வந்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?
அவர் ஒரு 83 வயது முதியவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒருவகையில் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு ரத்த பந்தம் தான். ஆனால் ரத்த பந்துக்கள் அனைவருக்குமே சொத்தில் பங்கு அளிக்க வழியிருக்கிறதா என்று கோர்ட் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகள் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஹை கோர்ட்டு தீர்ப்பு அளித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி இந்த முதியவர் என்.ஜி.வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது புகாரில் ஜெயலலிதாவுக்கு தான் ஒன்று விட்ட சகோதரர் முறை என்று தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் தகப்பனார் ஜெயராமனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜெயம்மாளுக்கு பிறந்த ஒரே மகன் நான். இரண்டாவது மனைவி வேதவல்லி எனும் வேதாம்மாளுக்கு பிறந்தவர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா இருவர். தந்தை இறந்த பிறகு குடும்பம் பிரிந்து விட்டது. ஜீவனாம்சம் கேட்டு தன் தாய் தொடர்ந்து வழக்கில் வேதவல்லி, ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா மூவரும் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், அந்த வழக்கு அப்போது சமரசத்தில் முடிந்து விட்டது. இப்போது ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்து விட்டதால், அண்ணன் என்ற முறையில் நான் தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக ஆவேன். எனவே ஜெயலிதாவின் மொத்த சொத்துக்களில் 50% பங்கை எனக்குத் தர ஜெ.தீபா, ஜெ.தீபக் இருவருக்கும் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு காலதாமதத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து விசாரிக்க
சென்னை ஹை கோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றியது ஹை கோர்ட். மேலும் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தீபா, தீபக் இருவரது பதில்களைப் பெற மாஸ்டர் கோர்ட் முன்பே நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், இருவருமே பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மாஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா சார்பில் ஆஜரான வக்கீல் தொண்டன் சுப்ரமணியன் எதிர்மனுதாரர்கள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்று விட்ட சகோதரரான முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக மாஸ்டர் கோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளமை தான் இந்த வழக்கின் முக்கியமான ஹைலைட்!