தரமற்ற குடியிருப்புகளை கட்டிய நாமக்கல் நிறுவனத்திற்கு பின்டெக் சிட்டி கட்டும் வாய்ப்பு - சர்ச்சையாகும் டெண்டர் விவகாரம்!

Tamil nadu arasu
Tamil nadu arasu
Published on

நந்தம்பாக்கத்தில் உருவாக இருக்கும் பின்டெக் சிட்டி கட்டுமானத்திற்கு நாமக்கலைச் சேர்ந்த பி.எஸ்.டி இன்ஜினியரிங் & கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு டெண்டர் அளித்திருக்கிறது. சென்னையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கே.பி பார்க் என்னுமிடத்தில் தரமற்ற கட்டிடத்தை கட்டிய வகையில் குற்றம்சாட்டப்பட்ட அதே நிறுவனத்திற்கு டெண்டர் கிடைத்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

கடந்த வாரம் பின்டெக் சிட்டி, பின்டெக் டவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் கலந்து கொண்டு திட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். பின்டெக் சிட்டி கட்டுமானப் பணிகளுக்கான பி.எஸ்.டி.இ.சி நிறுவனத்திற்கு டெண்டர் தரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. பின்டெக் டவர் கட்டுவதற்கும் அதே நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. ஆனால், வேறு ஒரு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.

பின்டெக் சிட்டி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு 82.87 கோடி ரூபாய் பி.எஸ்டி,இ.சி நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது. கடுமையான போட்டி இருந்தாலும் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலைக்கு டெண்டர் கோரியதால் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அ.தி.மு.க ஆட்சியின் போது மேற்கொண்ட கட்டுமானப் பணிகளுக்காக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க ஆட்சியின் போது சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் எனப்படும் கேசவபிள்ளை பூங்காவில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம், கையால் தொட்டாலே விழுகின்ற வகையில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் பத்மநாபன் தலைமையிலான க்யூப் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி கட்டிடம் கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 90 லட்ச ரூபாய் போனஸ் தரப்பட்டதும் தெரிய வந்தது. விசாரணை முடிவில் 441 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐஐடி குழு சமர்ப்பித்தது.

கட்டிடம் மோசமான தரத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீதும் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது. தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்ட அனைத்துக் கட்டங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்தது. ஆய்வு குழுவின் மீதான தி.மு.க அரசின் நடவடிக்கைகள் குறித்து இதுவரை தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com