மதுபானப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வரலாறு காணா அறிவிப்பு! எங்கு தெரியுமா?

மதுபானப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வரலாறு காணா அறிவிப்பு! எங்கு தெரியுமா?
Published on

உத்தரகாண்ட் அரசு தனது கலால் கொள்கையில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி என்றால் அரசு, மது பிரியர்களிடம் கருணை காட்ட முடிவு செய்துள்ளது. அதன் மூலமாக அரசு வகுத்த புதிய கொள்கையானது மாநிலவாசிகள் அவரவர் வீட்டில் 'அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் மதுக்கடை'யை அமைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்காக அவர்களிடம் இருந்து நபர்வாரியாக அரசாங்கம் கலால் வரியை வசூலிக்கும். ஒவ்வொரு நபரும் 60 லிட்டர் IMFL (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம்) வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது 80 பாட்டில்களுக்குச் சமம்.

மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மது நுகர்வைக் கருத்தில் கொண்டு, அதை வலுவான வருவாய் ஆதாரமாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளது. இதன் காரணமாக, இனிமேல் எதிர்காலத்தில், மதுபானப் பிரியர்கள் (குடிமகன்கள்) அதிகப்படியான மதுவை வீட்டில் வைத்திருக்க பயப்பட வேண்டியதில்லை.

மாநில கலால் துறையின் கூற்றுப்படி, "அதிக மதுபானங்களை வீட்டில் வைத்திருக்க, இப்போது உரிமம் பெற வேண்டும்".

செய்தியாளர்களிடம் பேசிய மாநில கலால் துறை செயலாளர் ஹரிச்சந்திரா செம்வால், "இந்தக் கொள்கை இறுதி செய்யப்பட்டதன் மூலம், உரிமைதாரர்கள் 60 லிட்டர் ஆங்கில மதுபானங்களை (விஸ்கி, இறக்குமதி மற்றும் இந்திய ஸ்காட்ச், பீர்) தங்கள் வீட்டில் வைத்திருக்க முடியும்" என்றார்.

மேலும் உரிமக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்த வேண்டும். அத்துடன், இதற்கு கலால் துறை விண்ணப்பதாரரிடமிருந்து ரூ.50,000 கியாரண்டி(உத்தரவாதத் தொகை) தொகையையும் வசூலிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், "தற்போதைய நிலவரப்படி, இப்போதைக்கு 12 பாட்டில்கள் மட்டுமே, அதாவது ஒன்பது லிட்டர் வரையிலான மதுபானங்கள் மட்டுமே வீட்டில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று கலால் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"ஆனால், இந்த முறை கலால் கொள்கை தனிநபர்களுக்கு வீட்டில் பார் வைத்துக்கொள்ள உரிமம் வழங்குகிறது"

இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி அதிக அளவு மதுபானங்களை தங்கள் வீடுகளில் வைத்திருக்க முடியும் என மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.

சிவில் சந்தையில் விற்கப்படும் மதுபானங்களை மட்டுமே உரிமம் பெற்றவர் தனது வீட்டில் வைத்திருக்க முடியும். உரிமம் பெற்றவர்களின் வீட்டில் இருந்து ராணுவ கேண்டீன்கள் அல்லது பிற மாநிலங்களில் இருந்து பெறப்படும் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். ஐடிஆர் ஐ ஐந்து ஆண்டுகளாக தாக்கல் செய்து வருபவர் மட்டுமே

உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகப் பெறப்பட்டு, சோதனைக்குப் பின் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்படும்.

"சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மலைப்பகுதிகளிலும் பெரிய ரிசார்ட்டுகள் கட்டப்படுகின்றன" என்று கலால் துறை நம்புகிறது. இங்கு உள்நாடு மற்றும் வெளியூர் விருந்தினர்கள் வந்து தங்குகின்றனர், ஆனால், மலைப்பகுதியில் தரமான மதுபானம் இல்லாததால், தூரத்தில் இருந்து கொண்டு வர வேண்டும் அல்லது வெளியில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மதுபானக் கடைகளைத் திறப்பதற்கான உரிமக் கட்டணத்தை, இவர்களது வசதிக்காக மாநில கலால் துறை குறைத்துள்ளது.

கலால் துறை விதித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பின்வரும் நிபந்தனைகள் இருக்கும்:

v 21 வயதுக்குட்பட்ட இளைஞரோ அல்லது இளம்பெண்ணோ வீடுகளில் அமைக்கப்படும் பார் வளாகத்திற்குள் நுழைய மாட்டார்கள்.

v சிவில் அதாவது மாநிலத்தில் விற்கப்படும் மதுபானங்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும்.

v இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆல்கஹால் மற்றும் இந்திய ஸ்காட்ச் ஒவ்வொன்றும் ஒன்பது லிட்டருக்கு மேல் இருக்காது.

v இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை 18 லிட்டர் அதாவது இரண்டு பெட்டிகள் மட்டுமே வைக்க முடியும்.

v ஒயின் ஒரு பெட்டி மட்டுமே இருக்கும்.

v பீர் 15.6 லிட்டர் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com