நமது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இட்லி என்ற எளிய உணவு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் காலை உணவுகளில் ஒன்று. பொதுவாக சிறிய உணவு விடுதிகளில் இட்லி தயாரிக்கும் போதே... இட்லி தயாரானதும் சமையற்காரர் ஆவி பறக்க அவசர அவசரமாக அத்தனை இட்லிகளையும் அகன்றதொரு தட்டில் கொட்டி அவற்றை அடுக்குவது காணக் கண்கொள்ளாக் காட்சி. அதற்கெல்லாம் எப்போதுமே ரசிகர் கூட்டத்திற்குப் பஞ்சமே இல்லை. தெய்வீக அனுபவங்களைப் பெற விரும்புபவர்கள் இட்லிப் பானையின் முன்னே அதன் ஆவி காலாவதியாகும் முன் சற்றுத் தவமிருந்தால் தேவலாம் எனும்படியான உணர்வுகளைக் கிளறி விடக்கூடியவை அத்தருணங்கள்.
கடந்த வெள்ளியன்று அப்படியொரு அனுபவம் மஹிந்திரா நிறுவன அதிபரான ஆனந்த் மஹிந்திராவுக்கும் கிட்டியிருக்கிறது என்பதை அவர் சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்திருந்த வீடியோ ஒன்று காட்டுகிறது, மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள பிரபலமான உணவு விடுதிகளில் ஒன்றான ஓம் சாந்தி கேட்டரர்ஸில் எடுக்கப்பட்ட அந்த இட்லி வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. காரணம் ஆனந்த் மஹிந்திரா மட்டுமல்ல இட்லியும் அதைத் தயாரிக்கும் மனிதரின் அசுரத்தனமான கடின உழைப்பும் நடுவில் தன் வளர்ப்புப் பசுவிடம் அந்த மனிதர் காட்டும் அன்பும் தான்!
இந்தக் கிளிப்பைப் பகிரும் போது, ஆனந்த் மஹிந்திரா , “ஒருபுறம் உங்களுக்கு ‘இட்லி-அம்மா’ இருக்கிறார், அவர் இட்லிகளை கர்ம சிரத்தையாகவும், மெதுவாகவும் தயாரிக்கிறார். மறுபுறம், இட்லிகளை மிக அதிக அளவில் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெகுஜன உற்பத்திக்கான சில கருவிகளும் உங்களிடம் உள்ளன! எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் ஒரு இந்தியனாக மனிதத் தன்மையை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மட்டும் எப்போதுமே தவறவிடாதீர்கள்: கடின உழைப்பின் நடுவில் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரான பசுவுடன் ‘இட்லி-காதலை’ பகிர்ந்து கொள்ள எடு சிறிய இடைவெளி!”. - என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்வீட்டில், மஹிந்திரா 85 வயதான கமலத்தம்மாளைப் பற்றிக் குறிப்பிடுகிறார், 'இட்லி பாட்டி'/ 'இட்லி அம்மா' என்று அழைக்கப்படும் இவர் 2019 ஆம் ஆண்டில் பின்தங்கியவர்களுக்கு உணவளிக்க வெறும் 1 ரூபாய்க்கு இட்லிகளை சமைத்து விற்றதற்காக சமூக ஊடகங்களில் மிகப்பரந்த அளவில் வைரலானார். 2019 ஆம் ஆண்டில், மஹிந்திரா நிறுவனம் அவருக்கு எல்பிஜி இணைப்பைப் பெற உதவியது அத்துடன் 2022 ஆம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் அவருக்கு ஒரு வீட்டையும் பரிசளித்தது.
மஹிந்திராவின் வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், “அம்மாவின் இட்லிகளை யாராலும் வெல்ல முடியாது, ஐயா, மனிதத் தொடுதல் மட்டுமல்ல, தாயின் அன்பும் கலந்தால், ருசி இணையற்றது!” என்று எழுதினார்.
மற்றொரு நபரோ “ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் மனிதத் தொடர்பை இழந்து வருகிறோம். உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்குப் பதிலாக மெய்நிகர் உலகத்துடன் உரையாடத் தொடங்கியபோது முதலில் அதை இழந்தோம். பிறகு நமது செயல்களில் மனிதத் தொடர்பை இழந்தோம். எதிர்காலத்தில் நாம் ஓட்டும் கார்களுக்கு கூட மனிதர்கள் தேவையில்லை. என்று கருத்து தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் செயலூக்கத்துடன் இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அவ்வப்போது இப்படியான சமூக பொறுப்புணர்வு கலந்த வீடியோக்களை வெளியிட்டு தமக்கான அபிமானிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்.