

தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் வேளையில் ஒரு சில சர்ச்சைகளும் முடிவுக்கு வந்து கொண்டு இருக்கின்றன. பாமக கட்சி யாருக்கு சொந்தம்? என்ற குழப்பம் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் மருத்துவ ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்து வந்தது. தமிழகத்தில் திமுக ,அதிமுக , மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்தில் பாமகவிற்கு குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி இருப்பதால் , ஆரம்ப காலத்தில் அதன் கூட்டணிக்கு கடுமையான டிமான்டுகளில் இருந்து வந்தது.
தற்போது ஒரு பக்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது . மறுபக்கம் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பிரிவு திமுக கூட்டணியில் சேர்வதற்காக பகிரத பிரயார்த்தனம் செய்து வருகிறது. திருமாவளவன் தொடர்ச்சியாக பாமகவை திமுக கூட்டணிக்குள் சேர்க்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நிலைமை இவ்வாறு இருக்க..
பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தமானது? என்ற வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் , உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது. இந்த உரிமை போராட்டத்தில் யார் பக்கம் நீதி கிடைக்கும் என்று பொதுமக்களும், கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று அதற்கு ஒரு தெளிவான விடை தற்போது கிடைத்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த உரிமை வழக்கில் , முதலில் உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று கூறியிருந்தது. அதன் பின்னர் தேர்தல் ஆணையம் , இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்து இருந்தது.
மறுசீராய்வு மனுப்படி பிப் 9 , இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவின் படி பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு தான் சொந்தமாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் அன்புமணியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1, 2026 வரை செல்லுபடியாகும் எனத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் கூறுகின்றன. தேர்தல் ஆணையத்தின் கூற்றின்படி பாமகவின் சின்னமாகிய மாம்பழம் அன்புமணி தலைமையிலான பிரிவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொடி, சின்னம் ஆகிய அனைத்தும் அன்புமணிக்கு சொந்தமானது என்றும் மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையகமாக சென்னை திவாகர் தெருவில் உள்ள அன்புமணி பிரிவில் உள்ள முகவரியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மனுவில் அங்கீகரிக்கபடாத கட்சி விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற கூற்றை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு காரணமாக, அன்புமணி மேற்கொள்ளும் கூட்டணி முடிவுகளே செல்லுபடியாகும். இது அன்புமணிக்கு பெரிய பலத்தினை கொடுக்கும். தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவங்களின் கையெழுத்துடன் அங்கீகாரமும் அன்புமணிக்கு மட்டுமே உண்டு. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு மருத்துவர் ராமதாஸிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போது அன்புமணி தரப்பு அதிகாரப்பூர்வ பாமகவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ராமதாஸ் தலைமையிலான அணி சட்ட போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.