என்எல்சி பற்றிப் பேச தடை விதித்த ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

என்எல்சி பற்றிப் பேச தடை விதித்த ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Published on

டலூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உழவர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெ.ரவீந்திரன் தலைமையில் என்எல்சி நில அபகரிப்பு குறித்து பேச அவர்கள் முயன்றபோது, அதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்தப் பேச்சுத் தடை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டன அறிக்கை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர், ‘கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி. நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. உழவர் குறை தீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பதுதான். கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்னையே என்.எல்.சி. நிலப்பறிப்புதான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி. நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்?

என்.எல்.சி. நிலங்களைப் பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன்? என்எல்சி நிறுவனம், கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சிக்கு எதிரான உணர்வுகளைத் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி’ என்று அந்தக் கண்டன அறிக்கையில் அவர் பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com