வெண்ணிற ஆடை தேவதைகள்!

மே – 12 சர்வதேச செவிலியர் தினம்!
வெண்ணிற ஆடை தேவதைகள்!

னிதனாகப் பிறக்கும் எவருமே உடல்நலப் பாதிப்புகளைக் கடந்தே வரவேண்டும். நன்றாக இருக்கும் வரை நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் நாம் உடல் குன்றி படுக்கையில் வீழும்போது சட்டென்று மறைந்து விடுவார்கள். மருத்துவமனையில் சென்று சேர்க்கும் பெற்றோர் உள்பட அனைத்து உறவுகளும் செய்யத் தயங்கும் உடல் ரீதியான மருத்துவ சேவைகளை சிறிதும் சலிக்காமல் புன்னகையுடன் செய்து நம் பாதிப்பை மாற்றி நலனைத் திரும்பத் தரும்  அதியற்புதமான பணியை செய்பவர்களே செவிலியர்கள் என்று அழைப்படும் நர்ஸ்கள். மற்ற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு கிடைக்காத சிறப்பு  வெள்ளை உடை உடுத்தி தேவதைகளாக வலம் வரும் செவிலியர்களுக்கு மட்டும் உண்டு.

இவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் விதமாகத்தான்  மே12 ஆன இந்த நாளில் சர்வதேச செவிலியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தின் பின்னணியில் இருப்பவரும் ஒப்பற்ற செவிலியர் ஒருவரே. அவர்தான் இத்தாலியைச் சேர்ந்த ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். விளக்கேந்திய காரிகையாக இரவு என்றும் பாராமல் துணிவுடன் 1900 ஆண்டுகளில் போர் நடக்கும் தளங்களுக்கே நேரடியாக சென்று காயம் பட்ட வீரர்களுக்கு முதலுதவி சேவைகளைத் தந்து பல உயிர்களைக் காப்பாற்றிய உன்னத செவிலியரான இந்த அம்மையாரின் பிறந்த நாளைத்தான்  உலக செவிலியர் தினமாக 1974 ஆம் ஆண்டிலிருந்து உலகமெங்கும் கொண்டாடி வருகிறோம்.

இவர் தான் சார்ந்திருந்த செவிலியர் துறைக்காக செய்த சேவைகள் ஏராளம். அந்தக் காலத்திலேயே நவீன செவிலியர் சேவையை அறிமுகப்படுத்தி இந்தப் பணியில் இருக்கும் வசதிக்குறைவுகள் குறித்து சக செவிலியர் களுக்காக குரல் தந்து போராடியவர்.

ஒவ்வொரு ஆண்டும் சூழலுக்கேற்ப ஒவ்வொரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் செவிலியர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு எங்கள் செவிலியர் எங்கள் எதிர்காலம்  (Our Nurses Our Future) என்ற கருப்பொருளை மையமாக்க முடிவு செய்துள்ளது சர்வதேச செவிலியர்கள் அமைப்பு.

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்

கடந்த இரண்டு வருடங்களாக கொரானா எனும் பெருந்தோற்றில் உலகம் முழுக்க எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு பலியானதை அனைவரும் அறிவோம். அந்நேரத்தில் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி கொரானா நோயாளிகளுக்கு பணிவிடை செய்த செவிலியர்கள் அதே கொரானாவுக்கு பலியான பரிதாபங்களும் அநேகம். இதற்கு இந்தியா உள்பட அவர்களுக்குத் தகுந்த முறையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் போனதும்தான் என்கின்றனர் பாதிக்கப்பட்ட செவிலியர்கள். இந்த பிரச்சினையால் பெரும்பாலான செவிலியர்கள் மனஅழுத்தம் முதல் நோய்த்தோற்று வரை உள்ளாகி அவஸ்தைப்பட்டனர். மேலும்  உலக அளவில் செவிலியர்களின் தேவைகள் அதிகம் இருந்தாலும் செவிலியர்களின் பற்றாக்குறைகளும் அதே அளவில் இருப்பதாக சர்வதேச மதிப்புகள் குறிப்பிடுகிறது. சமீபத்தில் கொரானா நேரங்களில் பகுதி நேர செவிலியராக பணியமர்த்தப்பட்டவர்கள் நிரந்தர பணி வாய்ப்புக்காக போராடியது நினைவிருக்கலாம்.

இது போன்ற பல்வேறு செவிலியர் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதே இந்த வருட செவிலியர் தின கருப்பொருளின் நோக்கமாகிறது. கொரானா கற்றுத் தந்த பாடம் மற்றும் மாறி வரும் உலக சூழல்களை கருத்தில் கொண்டு நம்மைக் காக்கும் செவிலியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை வழங்க அனைத்து நாடுகளும் ஆவன செய்ய வேண்டும் என்பதே செவிலியரின் கோரிக்கை.

நாம் சிறு குழந்தையாக இருந்தபோது சற்றும் அசூயை இன்றி மலம் கழித்ததும் கழுவி சுத்தம் செய்யும் பாசமுள்ள பாட்டிகளின் அன்பை செவிலியர்களிடம் மட்டுமே காணலாம். சம்பளம் பெற்றுத்தானே இந்தப் பணியை செய்கிறார்கள் என்று சிலர் அவர்களை அலட்சியப்படுத்துவதும் உண்டு. ஆனால் கோடி ரூபாய் இருந்தாலும் மருத்துவமனையில் செயலற்று இருக்கும்போது இவர்களே உதவுவார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்குத் தகுந்த மரியாதையைத் தரவேண்டும். நலம் பெற்றுத் திரும்பும்போது அவர்களைப் பாராட்டி நாம் சிந்தும் நன்றிப் புன்னகை மட்டுமே அவர்களுக்கான உந்து சக்தி. இதை மனதில் வைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை தருவது நம் போன்ற பொதுமக்களின்  கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com