

புராதன கலைகளின் மூலம் இந்தியாவில் உருவாக்கப்படும் ஆச்சரியம் தரும் பல நுட்பமான வேலைபாடுகள் உலகத்தினர் இடையே பரவலாக பெரும் மதிப்புக்குரியதாக இருந்து வருகிறது.
பல்வேறு ஆட்சி மாற்றங்களின் போது இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல விதமான கலைப் பொருட்கள் பற்றி நாம் கேள்வி பட்டுள்ளோம்.
உதாரணமாக உலகின் புகழ்பெற்ற வைரங்களில் ஒன்று கோஹினூர் வைரம் (Koh-i-Noor Diamond) பல கட்டுப்பாடுகளைத் தாண்டி, 1849ல் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு சொந்தமான பல ஆயுதங்கள், பட்டங்கள், புலிக்கொடி, புலி வடிவக் கண்காணிப்பு கருவி (Tipu’s Tiger automaton) போன்றவை இன்று லண்டன் V&A Museum மற்றும் பிற அருங்காட்சியகங்களில் உள்ளதை அறிவோம்.
அந்த வரிசையில் வருகிறது புகழ்பெற்ற பஞ்சாப் காங்ரா ஓவியங்கள்:
பஞ்சாபின் காங்ரா பகுதியில் வரையப்பட்ட 200 வருடங்கள் பழமை மிகுந்த சுமார் ரூபாய் 2 1/2 கோடி மதிப்பிலான ஓவியங்களால் கவரப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் அவற்றை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றனர்.
இது நடந்தது ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1810 ம் ஆண்டில் எனப்படுகிறது. அதன் பின் அவைகள் 1980 ம் ஆண்டில் தனியார் ஏலம் நிறுவனத்தின் கீழ் ஏலம் விடப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்கள் இந்து புராணங்கள் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளித் துகள்களால் வரையப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவிற்கு சொந்தமான இந்த ஓவியங்களை மீட்க மத்திய அரசுடன் இணைந்து பஞ்சாப் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அப்படி என்ன சிறப்பு இந்த ஓவியங்களில்? காங்ரா ஓவியங்கள் (Kangra Paintings) என்பது மென்மையான நிறங்கள், இயற்கை காட்சிகள், ராதா–கிருஷ்ணர் பக்தி பாங்கு, நுணுக்கமான தூரிகை வேலை ஆகியவற்றால் பிரபலமான, மிக அழகான பஹாரி ஓவிய மரபின் உச்சமாக கருதப்படுகிறது.
பஞ்சாப் & இன்றைய ஹிமாச்சலின் காங்க்ரா பள்ளத்தாக்கில் 17–19ம் நூற்றாண்டில் வளர்ந்த புகழ் பெற்ற பஹாரி ஓவிய மரபின் முக்கியப் பிரிவாக விளங்கும் இந்த ஓவியங்கள் பக்தி சார்ந்த கருப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக அமைகிறது
குறிப்பாக கிருஷ்ணர் & ராதை கதைகள் (Gita Govinda, Bhagavata Purana) மிகப் பிரபலமானவை.
மேலும் ராஜபூத் அரண்மனை வாழ்க்கை, காதல், இயற்கை என்ற தலைப்புகளிலும், காங்க்ரா பள்ளத்தாக்கின் இயற்கை அழகுகளான மலை, பள்ளத்தாக்கு, ஆறுகள், மரங்கள் ஆகியவற்றின் மென்மையான வடிவமைப்புகளிலும் , இயற்கை கற்கள், தாவரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட நிறங்கள் கொண்டு செழுமையான, ஆனால் கவரும் ஒளியுடன் வரையப்பட்டுள்ளன.
மெலிந்த, நளினமான முகவடிவங்கள்,நீண்ட கண்கள், மென்மையான முகபாவங்களுடன் பெண்களின் தனித்தன்மையான அழகு ஓவியங்கள் காங்ரா பாணியின் அடையாளமாக உள்ளது.
மிக நுணுக்கமான கோடுகள்,மென்மையான ஷேடிங் , பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல...
புத்துணர்ச்சியூட்டும் பச்சை, நீலம், சிவப்பு போன்ற இயற்கை நிறங்களுடன் சிப்பி & தங்கம் பயன்பாடுகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல தனித்துவ சிறப்புகளைப் பெற்ற இந்த ஓவியங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் இங்கிலாந்து தற்போது இவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப தடை விதித்துள்ளது.
இந்தியா இந்த ஓவியங்களை மீட்க முயற்சித்து வரும் நேரத்தில் இந்த தடை கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம்.
அத்துடன் இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சரான பியானோடைகிராஸ் " இந்த ஓவியங்கள் இங்கிலாந்து நாட்டின் சொத்து.
எங்களுடைய கலாச்சாரத்தை தனித்துவப்படுத்தும் வகையில் உள்ள இதனை விட்டுக் கொடுக்க மாட்டோம்" என கூறியுள்ளது இந்தியர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
திரும்ப இந்தியா வந்து சேருமா இந்த மதிப்பு மிக்க நமது மண்ணின் அடையாளம் என்ற ஆவலுடன் நாமும்.