அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பானி மனைவி!

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பானி மனைவி!
Published on

அமலாக்கத்துறை விசாரணை என்றால் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் அலர்ஜியாக தெரிகிறது. கோடிகளில் வியாபாரம் செய்யும் தொழிலதிபர்களுக்கு வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சம்மன் என்பதெல்லாம் வழக்கமானதாகவே இருக்கிறது. இந்தியாவே வியக்கும் ரிலையன்ஸ் குழும சகோதரர்களுள் ஒருவரான அனில் அம்பானியும் அப்படித்தான்.

ரிலையன்ஸ் குழும சகோதரர்களுள் ஒருவரான அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், அவரின் மனைவி டீனா அம்பானியிடமும் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணைத் நடத்தி உள்ளனர். அந்நிய செலாவணி தடைச்சட்டத்தின் கீழ் விதிமுறைகளை மீறியிருப்பதாக முன்னதாக சம்மன் அனுப்பியிருந்தது. தெற்கு மும்பையில் உள்ள பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை பத்து மணிக்கு விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பானியிடம் மாலை ஐந்து மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது அனில் அம்பானிக்கு சொந்தமாக 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி நேரில் ஆஜரான அனில் அம்பானி 800 கோடி ரூபாய் முதலீடு பற்றி விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மனைவிடமும் கணக்கில் வராதா பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி தடைச்சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும். கணக்கில் காட்டடப்படாத 800 கோடி ரூபாய் என்பது தற்போதைய டாலர் மதிப்பை பொறுத்து கணக்கிடப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கு பின்னர் நடைபெற்ற விசாரணையின் படி வெளிநாடுகளில் இருந்த இரு நிறுவனங்களுடன் அனில் அம்பானிக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

2006ல் அனில் அம்பானியால் உருவாக்கப்பட்ட டயமண்ட் ட்ரஸ்ட்க்கும் ஸ்விஸ் வங்கியில் இருந்த ஒரு கணக்கிற்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து இன்னும் பல விபரங்களை திரட்டியுள்ள அமலாக்கத்துறை, கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 பிப்ரவரி மாதம், ஐரோப்பிய நீதிமன்றத்தில் தான் திவாலாகிவிட்டதாக அறிவிக்குமாறும் அனில் அம்பானி கோரியிருந்தார். அவர் மீது மும்பை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கு விசாரணையில் அவருக்கு இரண்டு சுவிஸ் வங்கி கணக்குகள் இருந்ததாகம் அதன் மூலம் 420 கோடி மற்றும் 814 கோடி அளவில் விதி மீறல்களை மீறி நிதியை கையாண்டிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

அனில் அம்பானி மீதான சர்ச்சைகளுக்கு முடிவே இல்லை. சுவிஸ் லீக் விசாரணையில் ஜெனீவா ஹெஎஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2006ல் அப்போதைய மதிப்பில் 26 மில்லியன் டாலர் பணம் இருந்ததாக கூறப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையும், மும்பை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்தால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com