அஞ்சலி:இந்திய தொல்லியல் துறையின் பிதாமகர் இரா. நாகசாமி!

அஞ்சலி:இந்திய தொல்லியல் துறையின் பிதாமகர் இரா. நாகசாமி!

மஞ்சுளா சுவாமிநாதன்.

தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல்துறை அறிஞரும் சரித்திர ஜாம்பவானுமான பத்ம பூஷன், டாக்டர் இரா. நாகசாமி தனது 91 ஆம் அகவையில், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில், அமைதியான முறையில் நேற்று முன்தினம் ( ஜனவரி 23) இயற்கை எய்தினார்.

இது நிச்சயமாக இந்திய தொல்லியல் துறைக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. காரணம், இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அவரது ஈடுபாடும், பங்களிப்புகளும் ஏராளம்.

வளர்ந்து வரும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும், அல்லது அந்த துறையின் மாணவர்களாக இருக்கட்டும், அவர் எழுதிய 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்தாலேயே டாக்டரேட் வாங்கிவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு கடலளவு ஞானம் அவருக்கு.

இவ்வளவு ஏன்? இந்த கொரோனா ஊரடங்கின்போதுகூட வருடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில், 2020-ல் 'தர்ம யோகா' என்ற புத்தகமும், 2021-ல் 'செந்தமிழ் நாடும் பண்பும்' என மற்றொரு புத்தகத்தயும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அவர் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும், இந்திய அரசின் உயரிய விருதான 'பத்ம பூஷன்' விருதும் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்! ஆனால், அந்த விருதுகளை தாண்டி அவரது சாதனைகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பன்முகம் கொண்ட மேதை..

சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டதாரியான டாக்டர். இரா. நாகசாமி இந்திய கலைகளில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆளுமை உடையவர்.
இதைத்தவிர, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நாணயவியல் நிபுணர், சிற்பக்கலையில் வித்தகர், சோழர் கால வெண்கல சிலைகளின் ஆராய்ச்சியில் கரைகடந்தவர், பண்டைகால மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், வழிபாட்டு முறை, கோயில்கள், அவற்றின் செயல்பாடுகள் என எண்ணுக்கடங்கா பிரிவுகளில் அறிஞர்.
அவருக்கு இந்திய கவுன்சில் ஆப் ஹிஸ்டரிகல் ரீசர்ச் (ICHR), 2017-ம் ஆண்டு , அவருடைய சோர்வறியா தொண்டிற்கு 'குருகுல பெல்லாஷிப்' கொடுத்து கௌரவித்தது.

தமிழ் நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குனர் ( 1966-88)..

டாக்டர். இரா. நாகசாமி தனது 22 ஆண்டுகால பதவிக் காலத்தில் தமிழகம் முழுவதும் பல அருங்காட்சியகங்களும், மாவட்ட ரீதியான தொல்லியல் துறைகளும் நிறுவினார். கரூர், அழகன்குளம், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற சரித்திர புகழ் மிக்க இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டார்.
அவருடைய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால், ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியருக்கு வரலாற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தியதுதான். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் ஊருக்கு அருகிலுள்ள கோயில்கள், கோட்டைகள்,  மற்றும் வரலாற்று சின்னங்களுக்கு களப் பயணங்கள் செல்ல ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கும் அதற்கான பயிற்சியை அளித்தார்.
சின்ன சின்ன பாக்கெட் வழிகாட்டி புத்தகங்களை தமிழக அரசு சார்பில் அச்சடித்து வரலாற்று சுற்றுலாத் தளங்களில் விற்று மக்களிடையே சரித்திரத்தில் ஆர்வத்தை ஊட்டினார்.
இதுபோல அவரது ஒவ்வொரு செயலிலும் தமிழ் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அரும்பாடு பட்டார்.

அவரது கண்டுபிடிப்புகள்..

தமிழகத்தை முற்காலத்தில் ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றி நமக்கு அகழ்வாராய்ச்சி மூலம் சான்றுகள், ஆவணங்கள, மற்றும் ஆதாரங்களுடன் பல விஷயங்களை அவர் இயக்குனராக இருந்த காலக் கட்டத்தில் கண்டுபிடித்தார்.
அவற்றுள் முக்கியமானவை – முதலாம் நூற்றாண்டு சேரர் கால புகலூர் கல்வெட்டுகள், கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் மாளிகையின் சுவடுகள், பாஞ்சாலங்குறிச்சியில் வீர பாண்டிய கட்டபொம்மனின் அரண்மனை சுவடுகள், கரூர் தான் சேரரின் முற்கால தலைநகர் என்பது, மற்றும் எட்டயபுரத்தில் தேசிய கவி பாரதியின் பிறந்த வீடு.. ஆகியவை! இதைத் தவிர, கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நடுகல்களை இவர் கண்டுபிடித்துள்ளார். தமிழக கடற்கரையில், பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை முதன் முதலில் ஆழ்கடலில் அகழாய்வு மேற்கொண்ட பெருமை நாகசாமி அவர்களையே சாரும்.

நாட்டியதிற்கும், இதர கலைகளுக்கும் அவரது பங்களிப்பு..

இந்திய தொல்லியல் துறையை, மக்கள் மத்தியில் பிரபலப் படுத்த, அவர் இசையையும், நாட்டியத்தையும் கருவிகளாக பயன்படுத்தினார்.
1981-ம் ஆண்டு கபிலா வாத்சாயனாவுடன் இணைந்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவை நிறுவினார். அதுமட்டுமல்லாது, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், மணிமேகலை, அருணகிரிநாதர், அப்பர் போன்ற வரலாற்று புகழ்பெற்ற மக்களின் வாழ்க்கையை நாட்டிய நாடகங்களாக தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகில் பல நாடுகளில் பரப்பினார்.

1982-ம் ஆண்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் முதன் முறையாக ஒளி மற்றும் ஒலியைக் கொண்டு ஒரு கலை நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

பத்தூர் நடராஜர்..

நாகசாமியை பற்றி எழுதும்போது, பத்தூர் நடராஜர் சிலையைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
1982-ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தமிழ் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால வெண்கல சிலையை லண்டனில் கைப்பற்றியது.
அந்த சிலையை திருப்பித் தரும்படி இந்திய அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு இந்தியாவிலிருந்து முக்கிய சாட்சியாக சென்ற நாகசாமி அவர்கள், தனது அறிவாற்றல்  மற்றும் அனுபவத்தின் காரணமாக லண்டன் நீதிபதியை வியக்க வைத்து, சிலையை இந்தியாவிற்கே மீட்டெடுத்து வந்தார்.

முதுமையிலும் அயராத உழைப்பு..

சமீப காலத்தில் அவரோடு இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சமஸ்க்ருத பண்டிதர் டாக்டர். ரமாதேவி சேகர் அவரைப் பற்றி கூறியதைப் பார்ப்போம் , " அவர் இறக்க ஒரு நாள் முன்புகூட என்கிட்ட எங்கள் ஆராய்ச்சி சம்பந்தமா செய்ய வேண்டிய காரியங்கள் பத்தி பேசினார். என்னால நம்பவே முடியல அவர் இல்லங்கறத..''

தஞ்சாவூர் ராஜா பாபாஜி போன்ஸ்லே அவர அடுத்த மாசம் கௌரவிக்கறதா செய்தி கிடைச்சது. நாம ரெண்டு பேரும் கார்லயே மெதுவா போய்டலாம்'' னு ஆர்வமா சொன்னார். இந்த மாசம்கூட ஒரு 'டெம்பிள் ஆர்க்கிடெக்சர்' கோர்ஸ்க்கு முதல் லெக்சர் ' பஞ்சபூதங்கள் மற்றும் கோயில்கள் ' என்ற தலைப்புல ஒரு மணி நேரம் பேசி ரெகார்ட் பண்ணி அனுப்பிச்சார். எப்போதும் ஆராய்ச்சி, எழுத்து, லெக்சர், டாக்ஸ்னு ரொம்ப பிசியாவே இருப்பார். இந்த வயசுலயும் இத்தன சுறுசுறுப்பா ஒருத்தரை நா பார்த்ததே கிடையாது."

ஒரு தனி மனிதரால் தனது வாழ்நாளில் இத்தனை சாதிக்க முடியுமா? என்று நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. நாகசாமி என்பவர் ஒரு சகாப்தம், அவர் மண்ணில் மறைந்தாலும் நம்முள் விதையாகட்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com