தி.மு.க. ஊழல் பட்டியல் - பார்ட் டூ விரைவில் வெளியீடு - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

தி.மு.க. ஊழல் பட்டியல் - பார்ட் டூ விரைவில் வெளியீடு - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

ஊழல் செய்த தி.மு.கவினர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் முதல் பாகத்தை வெளியிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானதால் பார்ட் டூ வரவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் வருமானத்திற்கு மீறி சொத்துக்களை வாங்கி குவித்த தி.மு.க அமைச்சர்களின் பட்டியலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவலாக தெரிந்த விஷயங்களே இடம்பெற்றிருந்ததாக பேசப்பட்டது. தி.மு.க அமைச்சர்களின் ஊழல் மட்டும்தானா, அல்லது அ.தி.மு.கவினரின் பெயர்களும் உண்டா என்று கேள்வியெழுப்பியபோது கூடிய விரைவில் அடுத்த பட்டியல் வரும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தி.மு.க பொருளாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை, நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பா.ஜ.கவின் வழக்கறிஞர்கள் அணியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் குழுமியிருப்பது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டவர், தன்னுடைய ஊழல் பட்டியல் பெரும்பாலானவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தி.மு.கவின் முன்னணி தலைவர்கள் என் மீது ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிரான பா.ஜ.கவின் போராட்டம் வெற்றிகரமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் எங்களுடன் இணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் பட்டியலின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, பார்ட் டூ தயாராக இருப்பதாகவும், இதில் 300க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் வெளியாக உள்ள பார்ட் டூ பட்டியலில் அ.தி.மு.கவில் இருந்து தி.மு.க வந்து சேர்ந்துள்ள பிரமுகர்கள் அதிகமாக இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் பாதயாத்திரை அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில் பார்ட்டு டூ பட்டியல் கணிசமான கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற முறை ஊழல் பட்டியலை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டதோடு நின்றுவிடாமல் இம்முறை அதையே புகாராக தயார் செய்து ஆளுநரிடம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

ஊழல் பட்டியல் என்பது வெறும் பேசுபொருள் என்பதோடு நின்றுவிடாமல் அடுத்த கட்ட நடவடிக்கை நடப்பதற்கு ஏற்ற வகையில் ஆளுநரிடம் அளித்து சி.பி.ஐ விசாரணைக்கு முன்மொழியுமாறு கேட்டுக்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள். அதிரடி அரசியலை தொடர நினைக்கும் அண்ணாமலை தகுந்த ஆதாரங்களுடன் சி.பி.ஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறதாக கமலாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com