‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமர் ஆவார்’ அண்ணாமலை நம்பிக்கை!

‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமர் ஆவார்’ அண்ணாமலை நம்பிக்கை!
Published on

பாஜக அரசின் ஒன்பதாண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மத்தியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக அரசை உல நாடுகளே பாராட்டுகின்றன. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி, 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளதென்றால் அதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.

அரியலூர் மாவட்டம் திராவிட மாடல் ஆட்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதுதான் அவர்களது சாதனை. இந்த நிலையை மாற்ற சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சி வேட்பாளரோ போட்டியிட்டு வெற்று பெறுவார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் மோடியே பிரதமர் ஆவார்.

நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி, முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் இடம்பெற்று இருக்கிறார்கள். இன்று சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் கூட மருத்துவம் படிக்கச் செல்கின்றனர்.   

போக்குவரத்துத் துறையில் கடந்த 2014ல் நடைபெற்ற பணி நியமன முறைகேடு வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால், தற்போது அதன்படி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கர் நடவடிக்கைக்கு உள்ளாக இருக்கிறார். திமுகவினரின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணித் தலைவர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com