ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்து கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே மோதல் வலுத்திருக்கும் நிலையில் அ.தி.மு.கவினரின் கண்டனத் தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடியது. கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலை அணுகுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்பட்டாலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து முன்வைத்த விமர்சனங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சமீப காலமாக அ.தி.மு.க கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து அமைதியாக நடந்த கொண்டாலும், பா.ஜ.கவினரின் தொடர் மோதல் போக்கு குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு எதிராக பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும், பா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க எடப்பாடியை வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது என்றும், பா.ஜ.க தேசியத்தலைமையின் அடுத்து கட்ட நடவடிக்கையை பொறுத்து கூட்டணியை மறுபரிசீலினை செய்யவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே இருந்த கடந்தகால உறவுகளை கோடிட்டு காட்டிய கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்றும், தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தவரை அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் உள்நோக்கத்தோடு அண்ணாமலை விமர்சித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
நிர்வாகிககள் கூட்டம் முடிந்தபின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, கண்டனத் தீர்மானத்தை முழுவதுமாக படித்தார். பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் 4 எம்.எல்.ஏக்களை பெற்றுத் தர அ.தி.மு.கதான் காரணம் என்று கண்டனத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம், பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் வெறும் கண்டனத் தீர்மானம் போதாது. அண்ணாமலையை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவினர் முன்னெடுக்காவிட்டால் அ.ம.மு.க சார்பாக கண்டனக் கூட்டங்களை நடத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.