அண்ணாமலை ஊழல் பட்டியல் பார்ட் 2 விரைவில்…!

அண்ணாமலை ஊழல் பட்டியல் பார்ட் 2 விரைவில்…!
Published on

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் பதினேழு பேரின் சொத்து பட்டியைலை, ஊழல் புகார்களுடன் வெளியிடப்போவதாகத் தெரிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார்.

ஊழல் பட்டியலை வாசித்த அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவினரின் சொத்து பட்டியல் தொடர்பான ஆதாரங்களுடன் சிபிஐயிடம் தாம் புகார் அளிக்க உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை தெரிவித்திருக்கும் திமுகவினரின் சொத்துப் பட்டியல் மதிப்பு 1.31 லட்சம் கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, கனிமொழி, கலாநிதிமாறன், டிஆர்.பாலு, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி, சபரீசன் மற்றும் ஜி ஸ்கொயர் வருமானம் ஆகிய பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ‘‘தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது; மொத்தமாக எதிர்க்க வேண்டும். தலைவராக இருக்கும்வரை இப்படித்தான் செயல்படுவேன். யார் தயவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். ஊழலுக்கு எதிராக ஜூலையில், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நடைபெற உள்ளது. இன்னும் பத்து தேர்தலில் நான் தோல்வியடைந்தாலும் ஊழலுக்கு எதிராக பேசிக்கொண்டே இருப்பேன்" என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com